தமிழ்நாடு

டெல்லி செல்லும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் : தமிழ்நாடு அரசு சரியான பாதையில் செல்வதாக ஜெயக்குமார் பேட்டி!

டெல்லி சென்ற திருமாவளவன், ஜெயக்குமார் ஆகியோரை தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார்.

டெல்லி செல்லும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் : தமிழ்நாடு அரசு சரியான பாதையில் செல்வதாக ஜெயக்குமார் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழு இன்று டெல்லி சென்று ஒன்றிய அமைச்சரைச் சந்திக்கிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் அனைத்துக் கட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அ.தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளனர்.

இதற்காக காலை டெல்லி சென்ற திருமாவளவன், ஜெயக்குமார் ஆகியோரை தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார்.

டெல்லி சென்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், “கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம்.

மோடி அரசு தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்று நம்புகிறோம். கர்நாடகா அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். கர்நாடக அரசின் தமிழ்நாட்டிற்கு எதிரான முயற்சியை தடுத்த நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஜெயக்குமார், “அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

விவசாயிகள், மக்கள் நலனை கருதி, தமிழ்நாடு அரசு எடுக்கின்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க ஆதரவு உண்டு. தமிழ்நாடு அரசு சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய பிரச்சனையிலும் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories