தமிழ்நாடு

"ஆறே மாதம்... அனைத்து ஊடகங்களும் நம் வசம்" : பத்திரிகையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!

ஊடகங்கள் அனைத்தும் இன்னும் ஆறு மாதங்களில் கட்டுப்பாட்டிற்குள் வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"ஆறே மாதம்... அனைத்து ஊடகங்களும் நம் வசம்" : பத்திரிகையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை ஊடகத்திற்கான சுதந்திரம் நசுக்கப்பட்டே வருகிறது. மேலும், பா.ஜ.க அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பத்திரிகையாளர்களை, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

தமிழ்நாட்டிலும் முன்னர் இருந்த அ.தி.மு.க அரசைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஊடகங்களுக்கும், செய்தியாளர்களுக்கும் பா.ஜ.கவினர் மிரட்டல் விடுத்து வந்தனர். இவர்களின் மிரட்டலுக்கு பணிந்து சில தனியார் செய்தி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய சம்பவங்களும் தமிழ்நாட்டில் அரங்கேறின.

மேலும், தொலைக்காட்சி ஊடக விவாதங்களின் போதும் பா.ஜ.சை சேர்ந்த நாராயணன் போன்றவர்கள் பகிரங்கமாகவே நெறியாளர்களுக்கும், விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். இதனால் நாராயணன் பங்கேற்கும் விவாதத்தில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு, கேரளா மாநில ஊடகங்கள் மட்டுமே பா.ஜ.க அரசின் பொய், பித்தலாட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறது. இது பா.ஜ.கவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. இதனால் இந்த மாநில ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.

"ஆறே மாதம்... அனைத்து ஊடகங்களும் நம் வசம்" : பத்திரிகையாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!

அண்மையில் ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்கும் தலைவர்கள் பட்டியலை Reporters Without Borders (RSF) என்ற அமைப்பு வெளியிட்டது. இதில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், மோடிக்கு எதிராகச் செய்தி வெளியிடுவோரை மிரட்டும் செயலில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்க இருக்கும் அண்ணாமலையின் பேச்சு RSF அமைப்பின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் விதமாக உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ளார். எனவே இன்னும் ஆறு மாதங்களில் அனைத்து ஊடகங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவோம்" என ஊடகங்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

பா.ஜ.கவின் மாநில தலைவரே பகிரங்கமாக ஊடகங்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories