தமிழ்நாடு

“விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகளுக்கான தனியாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்”: கனிமொழி எம்.பி உறுதி !

தூத்துக்குடியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

“விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகளுக்கான தனியாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்”: கனிமொழி எம்.பி உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விற்பனை மையத்தைத் திறந்து வைத்து விற்பனையையும் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்கம் மூலம் புதிய உறுப்பினர்களுக்கு விவசாயக் கடன், மாற்றுத்திறனாளிகளுக்குக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் என 847 பயனாளிகளுக்கு சுமார் 4 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. பிறகு கூட்டுறவுச் சங்கம் மூலம் நடத்தப்படும் மருந்தகத்தைப் பார்வையிட்டு அங்கு நடைபெறும் மருந்து விற்பனை குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

பின்னர், கூட்டுறவுச் சங்கம் மூலம் நடத்தப்படும் பண்ணை பசுமை காய்கறி அங்காடி சென்று அங்கு உள்ள காய்கறிகள் விற்பனை குறித்தும் அதன் தரம் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர் மற்றும் எம்பியிடம் மக்களிடையே நல்ல வரவேற்புடன் காய்கறி விற்பனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பேசிய கனிமொழி எம்.பி, “கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்படும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கடன் கொடுத்ததற்கும் கணக்கில்லை. அதேபோல் கடனை ரத்து செய்ததற்கும் கணக்கில்லை என்ற அவலநிலை இருந்தது. ஆனால் தி.மு.க ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாகச் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும்.

இதையெல்லாம் தாண்டி விவசாயிகளுக்கான உரிமை என்பதை நிலைநாட்ட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். எனவே, விவசாயிகளுக்கான தனியாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories