தமிழ்நாடு

மேகதாதுவில் அணை கட்ட நினைப்பது சட்டவிரோதம்; அறிக்கை தயாரிக்க அனுமதித்தது நியாயமா? - அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்ட நினைப்பது சட்டவிரோதம்; அறிக்கை தயாரிக்க அனுமதித்தது நியாயமா? - அமைச்சர் துரைமுருகன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேகதாது குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை டெல்லி சென்று சந்தித்த பின் சென்னை திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியவர்,

”கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட நினைப்பது சட்டத்திற்கு புறம்பானது. உச்ச நீதிமன்றத்திற்கு எதிரானது. இந்நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்க அனுமதி அளித்தது நியாயம் தானா என கேள்வி எழுப்பினேன். ஒன்றிய அமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக நன்கு அறிந்துள்ளார் என்பதை இந்த சந்திப்பில் புரிந்துகொள்ள முடிந்தது.

விரிவான அறிக்கையை தயாரிப்பதால் மட்டுமே அணை கட்டிவிட முடியாது. அதை ஒன்றிய அரசும் அனுமதிக்காது. அணை கட்டுவதற்கான அனுமதிகள் பெறவேண்டும் என ஒன்றிய அமைச்சர் விளக்கினார். கர்நாடக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு தமிழக முதலமைச்சர் விரிவான கடிதம் எழுதியுள்ளார். அதற்கும் கர்நாடக முதல்வர் கருத்து தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது.

மார்க்கண்டேய அணை விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், சமரச குழுவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு ஆண்களாக நடுவர் மன்றம் அமைக்கப்படாமல் உள்ளது. காவேரி ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் அதற்கு நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் முறையிட மூன்று வருடமாக ஆணையர் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் ஆணையர் போடப்படுவதாக ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். பாஜக தலைவர் எல்.முருகனிற்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவி கொடுத்திருப்பது தொடர்பாக பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து யாராவது ஒருவர் ஒன்றிய அமைச்சர் ஆவது மகிழ்ச்சி தான் என தெரிவித்தார்.

முல்லை பெரியாறு துணை அணை கட்டுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளதாகவும் காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக தெரிவித்த அவர் இந்த சந்திப்பு மொத்தத்தில் மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories