தமிழ்நாடு

"சட்டமன்ற கூட்டத்தொடரில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட்" : விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர் கே.என்.நேரு!

விவசாயிகளின் நலனே தி.மு.க அரசுக்கு முக்கியம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

"சட்டமன்ற கூட்டத்தொடரில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட்" : விவசாயிகளிடம் உறுதியளித்த அமைச்சர் கே.என்.நேரு!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

அப்போது, போலிஸார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அவர்கள் சென்றுவிடாமல் இருக்கத் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதையடுத்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேநேரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, விவசாயிகள் போராட்டத்தை அறிந்தவுடன் அவர்களை நேரில் சந்திக்க அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சென்றனர்.

அப்போது, அமைச்சர்கள் வருவதை அறிந்த அய்யாக்கண்ணு அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தார். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு விவசாயிகளிடம் பேசுகையில், "விவசாயிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு உறுதுணையாக இருக்கும். நீங்கள் விவசாயிகளுக்காகப் போராடுகிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது தொடர்பாக மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துள்ளார். தி.மு.க அரசு விவசாயிகளின் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளுடன் இருக்கும்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவசாயிகளுக்காக புதிய பாசனத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார். அதிலும் குறிப்பாக, விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாயிகளின் நலனே தி.மு.க அரசுக்கு முக்கியம்" என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

banner

Related Stories

Related Stories