தமிழ்நாடு

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற மதுரை வீராங்கனை ரேவதி... தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அமைச்சர் உறுதி!

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ரேவதிக்கு அமைச்சர் பி.மூர்த்தி வாழ்த்து தெரிவித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற மதுரை வீராங்கனை ரேவதி... தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அமைச்சர் உறுதி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகியுள்ள ரேவதிக்கு அமைச்சர் பி.மூர்த்தி வாழ்த்து தெரிவித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வாகி உள்ள மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரேவதியை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

தாய், தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வாழும் ரேவதியிடம் தொடர்புகொண்டு பேசிய தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவரிடம் உறுதியளித்துள்ளார்.

பெற்றோர் இன்றி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த ரேவதி, ஒலிம்பிக்கில் தகுதி பெற்றுள்ள நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ரேவதி பதக்கம் வெல்ல வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரேவதி ஒலிம்பிக்கிற்கு தேர்வானது குறித்துப் பேசியுள்ள அவரது பயிற்சியாளர் கண்ணன், “மதுரையிலிருந்து முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது மதுரை மண்ணிற்கும் எங்களுக்கும் பெருமையாக உள்ளது.

ரேவதி 12ஆம் வகுப்பு மாணவியாக இருந்தபோது மண்டல அளவிலான தடகள போட்டியில் காலில் ஷூ இல்லாமல் கலந்து கொண்டவர். அதனைப் பார்த்து அவரிடமும் அவரது பாட்டியிடம் பேசி பயிற்சி அளித்து வந்தோம்.

கல்லூரி அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து ஆசிய அளவிலான தடகள போட்டியில் 4வது இடம் பிடித்தார் ரேவதி. தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் பயிற்சி எடுத்ததால் இன்று டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.” என்றார்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான ரேவதியின் பாட்டி ஆரம்மாள் பேசுகையில், “சிறுவயதிலேயே ரேவதியையும் அவளது தங்கையையும், அவர்களது அப்பா அம்மா இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்தேன்.

அவள் இந்த மைதானத்தில் வெறும் காலில்தான் ஓடினாள். ஷூ வாங்கக்கூட என்னிடம் வசதி கிடையாது. பயிற்சியாளர் கண்ணன்தான் அவளை இந்தளவுக்குக் கொண்டு வந்தார்” என நன்றியோடு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories