தமிழ்நாடு

“சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

“சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை தயார் செய்து தலைமை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களுடன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், முதன்மை பொறியாளர் சாந்தி, முதன்மை இயக்குநர் கோதண்டராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, சாலைகள், பாலப்பணிகள் சுணக்கமின்றி நடைபெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும், அதன்படி ஒப்பந்தம் போடும்போது தார் விலையில் உள்ள வித்தியாசங்களை சரி செய்ய வேண்டும், சாலைகள் அமைக்க தேவையான கச்சா பொருட்கள் டெல்டா பகுதிகளில் கிடைப்பதில்லை. மதீப்பீடுகள் மாற்றி செய்யப்படுவதால் இழப்பு ஏற்படுவது தொடர்பாகவும், கண்காணிப்பு பொறியாளர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும், நிலம் கையகப்படுத்துவதற்கு தனி அலுவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ஒப்பந்ததாரர்கள் வைத்துள்ளதாகக் கூறினார்.

ஒப்பந்ததாரர்கள் கூறிய கோரிக்கைகள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல் 10 ஆயிரம் கி.மீ சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உள்ளாட்சித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், உள்ளாட்சி துறை சாலைகளை ஒப்படைத்ததும் நெடுஞ்சாலைதுறை தரத்திற்கு ஏற்ப கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கப்படும் என்றார்.

கடந்த ஆட்சியில் அறிவித்தபடி, சென்னையில் 5 புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் எனக் கூறிய அமைச்சர் எ.வ.வேலு, தார் சாலைகள் அமைக்கும்போது உயரமாக போடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பான அறிக்கையை ஏற்கனவே தயார் செய்து தலைமை செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மணல் கிடைக்காமல் இருக்கும் இடங்களில் எம்.சாண்ட் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், 8 வழிச்சாலை குறித்து அரசின் நிலையை சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories