தமிழ்நாடு

தேசிய அளவிலான தேர்வுகளில் தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடி அரசு.. கொந்தளிக்கும் மதுரை எம்.பி!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வை தமிழகத்தில் வைக்காமல் பிற மாநிலங்களில் போய் தேர்வு எழுதும் நிர்ப்பந்ததை உருவாகியுள்ளது ஒன்றிய அரசு.

தேசிய அளவிலான தேர்வுகளில்  தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடி அரசு.. கொந்தளிக்கும் மதுரை எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும், இந்தி மொழியை திணிக்கும் திட்டத்தில் ஒன்றிய மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக அரசு தேர்வுகளை கையில் எடுத்துள்ளது. முதலில் அரசுத் தேர்வுகள் மூலம் இந்தியை உட்புகுத்திவிட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பரப்புவதற்கு திட்டம் தீட்டி வருகிறது மோடி அரசு.

அந்த வகையில், ஏற்கெனவே தபால்துறை, ரயில்வே துறைக்கான தேர்வுகளில் மாநில மொழிகளுக்கு பதில் ஆங்கிலத்தோடு இந்தியை மட்டும் சேர்த்தது ஒன்றிய அரசு. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் பிராந்திய மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என பா.ஜ.க அரசு பல்டி அடித்தது.

அதேபோல் நீட் உள்ளிட்ட தேசிய தேர்வுகளின் போது தமிழ்நாட்டிற்கு மையங்களை ஒதுக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி தமிழ்நாட்டு மாணவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. அந்தவகையில், அணுசக்தித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வை தமிழகத்தில் வைக்காமல் பிற மாநிலங்களில் போய் தேர்வு எழுதும் நிர்ப்பந்ததை உருவாக்கியுள்ளது.

தேசிய அளவிலான தேர்வுகளில்  தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கும் மோடி அரசு.. கொந்தளிக்கும் மதுரை எம்.பி!

மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அணு எரி பொருள் வளாகம் (Nuclear Fuel Complex) 21.06.2021 வெளியிட்டுள்ள அறிவிக்கை Stage I Priliminary (Screening) Test for the post of Stipendary Trainee Category - I, Post Code 21901- 21911. Advertisement No. NFC/02/2019 நியமன முதல்படித் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வு எழுத நாடு முழுவதும் 6 மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மையம் கூட தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்கள் பெங்களூரில் போய் தேர்வெழுத வேண்டும். தனித்திரு என்கிறது அரசின் கோவிட் வழிகாட்டுதல். ஆனால் மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் அலையவிடுகிறது ஒன்றிய அரசு.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை முடியவில்லை. ஜூன் 28 அன்று கூட கர்நாடகா முழுவதும் 2576 புதிய தொற்றுகள், 93 மரணங்கள். இவற்றில் பெங்களுர் 20% எனில் எப்படி மன அமைதியோடும், உரிய கவனத்தோடு தேர்வர்கள் அலைந்து தேர்வு எழுத முடியும். டெல்டா பிளஸ் எச்சரிக்கைகள் வேறு விடுக்கப்படுகின்றன.

உயர்கல்வி விகிதத்திலும், எண்ணிக்கையிலும் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள ஒரு மாநிலத்தை ஒன்றிய அரசு இப்படித்தான் அணுகுமா? தொடர்ந்து ஒன்றிய அரசின் தேர்வுகளில் எல்லாம் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதும் நாம் குரல் எழுப்புவதும் தொடர்கதையாக உள்ளது.

பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள அணுசக்தித்துறை தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டிலும் ஒரு தேர்வு மையம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுசக்தி துறை தலைவர் டாக்டர் தினேஷ் ஸ்ரீ வஸ்தவா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories