தமிழ்நாடு

“சிறு, குறு - நடுத்தர நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சியை பெற உறுதியான நடவடிக்கை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் !

குறு, சிறு-நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான வளர்ச்சியை பெறுவதற்கு, தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி முன்னோடி நடவடிக்கைகளை எடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

“சிறு, குறு - நடுத்தர நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சியை பெற உறுதியான நடவடிக்கை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு :-

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் திங்கள் 27ம் நாள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. முன்னேற்ற நோக்கங்களை அடைவதிலும், புதுமை மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதிலும், உலகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி கொண்டாடப்படுகிறது.

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண்துறைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் விளங்குகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெருந்தொழில்களுக்கு துணையாக இருப்பதுடன் நாட்டின் உள்ளடக்கிய தொழில் வளர்ச்சிக்கும், சீரான வட்டார வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றன.

“சிறு, குறு - நடுத்தர நிறுவனங்கள் நீடித்த வளர்ச்சியை பெற உறுதியான நடவடிக்கை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் மிகத் திறமையான மனித ஆற்றலை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. புதிய தொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக மட்டுமல்லாது வாகன உதிரி பாகங்கள், இயந்திர தளவாடங்கள், மருந்துப் பொருட்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உள்ளிட்ட தொழில்களின் முக்கிய தளமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொரோனா பெருந்தொற்று நோய் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை விரைந்து மீட்டெடுக்க ஏதுவாக தொழில் நிறுவனங்கள் உடனடியாக பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருவதுடன், சிறு கடன் பெற்றுள்ளவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாறிவரும் பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட எத்தகைய சவால்களையும், போட்டி சூழலையும் எதிர்கொள்ள ஏதுவான வகையிலும், தொடர்ந்து நீடித்த நிலையான வளர்ச்சியை பெறுவதற்கும் ஏதுவான வகையிலும், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை உருவாக்கி முன்னோடி நடவடிக்கைகளையும் எடுக்கும் என இந்த நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைந்து மீட்டெடுக்க தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த அரசு செயல்படும். இந்த இனிய நாளில் அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories