தமிழ்நாடு

“ஆக்கப்பூர்வ தொடக்கத்தின் அறிகுறியாக அமைந்த ஆளுநர் உரை” : ‘தீக்கதிர்’ தலையங்கம் புகழாரம் !

தமிழகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க அரசு செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் விருப்பமும் ஆகும் என தீக்கதிர் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

“ஆக்கப்பூர்வ தொடக்கத்தின் அறிகுறியாக அமைந்த ஆளுநர் உரை” : ‘தீக்கதிர்’ தலையங்கம் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரசு ஆக்கப்பூர்வமான முறையில் அணுகும் என்ற நம்பிக்கையை ஆளுநர் உரை அளிக்கிறது என தீக்கதிர் தலையங்கம் தீட்டியுள்ளது.

தீக்கதிர் நாளிதழில் வெளியாகியுள்ள தலையங்கம் பின்வருமாறு:-

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணி மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அறுதிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சட்டப்பேரவையில் புதிய அரசின் கொள்கைப் பிரகடனமாகவும், எதிர்கால திசைவழியாகவும் அமைந்துள்ள ஆளுநர் உரை நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை மற்றும் செயல்திட்டங்களின் தொகுப்பே ஆகும். அந்த வகையில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. புதிய அரசின் தொடர் முயற்சியின் காரணமாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டி ருந்தபோதும் மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்கள், அறிவியலாளர்கள் எச்சரித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மாநில சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகள் காலத்தின் தேவையாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஜனநாயகத்தின் அடிவேராக விளங்குகிற உள்ளாட்சி அமைப்புகள் சிதைக்கப்பட்டன. இறுதிக்கட்டத்தில் அரைகுறையாகவே உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதி நடத்தப்பட்டது. அதிலும் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தன.

“ஆக்கப்பூர்வ தொடக்கத்தின் அறிகுறியாக அமைந்த ஆளுநர் உரை” : ‘தீக்கதிர்’ தலையங்கம் புகழாரம் !

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படுவதோடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படுவதும் அவசியமாகும்.

ஒன்றிய அரசு சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பில் வெறித்தனமான முனைப்பு காட்டும் சூழலில் ஒன்றிய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஏற்கச் செய்வதற்கான வலியுறுத்தல் மற்றும் தமிழகத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள்மற்றும் வங்கிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்த அறிவிப்புகள் காலப் பொருத்தப்பாடு உடையது.

கடந்த ஆட்சியில் அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்ச ஊழல் நடைமுறைகள் மலிந்துவிட்டன. லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனால் அது பொருந்தாத காரணங்களைச் சொல்லி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவித்திருப்பதும் லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்று கூறப்பட்டிருப்பதும் நல்லது. அண்டை மாநிலங்களுடன் நதிநீர் தாவா உள்ளிட்ட பிரச்சனைகள் இணக்கத்தின் அடிப்படையில் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

“ஆக்கப்பூர்வ தொடக்கத்தின் அறிகுறியாக அமைந்த ஆளுநர் உரை” : ‘தீக்கதிர்’ தலையங்கம் புகழாரம் !

அதே நேரத்தில் ஒன்றிய அரசு மாநிலங்களின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்துவரும் நிலையில் கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும். இதற்கான பல்வேறு அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.

கொரோனா தொற்று மற்றும் கடுமையான நிதிச் சுமையில் தமிழகம் சிக்கியுள்ள நிலையில் பொறுப்பேற்றுள்ள திமுக அரசுக்கு பல்வேறு கடமைகள்உள்ளன. இவற்றை இந்த அரசு ஆக்கப்பூர்வமான முறையில் அணுகும் என்ற நம்பிக்கையை ஆளுநர் உரை அளிக்கிறது. தமிழகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில் திமுக அரசு செயல்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் விருப்பமும் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories