தமிழ்நாடு

“ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளைத் துவக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் திட்டவட்டம்!

அரியலூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளைத் துவக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

“ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளைத் துவக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைத் துவக்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார்.

எனவே ஒன்றிய அரசு ஹைட்ரோகார்பன் பணிகளை தமிழ்நாட்டில் அனுமதித்தாலும் அதனை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மேலும், அரியலூர் மாவட்டம் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் வகையில் சித்த மருத்துவ பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் குறித்துக் கேட்டபோது, கொரோனா காலத்தில் இருப்பதால் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு மும்முரமாக தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. நிலக்கரித் திட்டம் குறித்து அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories