தமிழ்நாடு

கொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை!

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கி, முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் எழுதிய இளம்பெண் சௌமியாவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

கொரோனா நிதியாக தங்கச்சங்கிலி கொடுத்த இளம்பெண் செளமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் சேர்வதற்கான பணி ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 பவுன் செயின் வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உருக்கமான கடிதம் எழுதிய இளம்பெண் சௌமியாவிற்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

மேட்டூர் அணையைத் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜூன் 12ஆம் தேதி சேலம் மாவட்டம் சென்றிருந்தபோது, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அப்போது, செல்வி இரா. சௌமியா என்பவர் அளித்த கடிதத்தில், “என்னிடம் பணம் இல்லாததால் கொரோனா நிதியாக எனது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை கொடுக்க விரும்புகிறேன். நான் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. எனது தந்தை பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து இறந்துவிட்டார்.

எனது தந்தையின் சேமிப்பு அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்தும் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. எங்களுக்கு சொந்தவீடு கிடையாது. அம்மா இறந்தபிறகு எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம். எனது தந்தைக்கு ஓய்வூதியமாக ரூபாய் 7000 கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூபாய் 3000 போக ரூ.4000-ஐ வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.

எனக்கு அம்மாவாக இருந்து எனக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசு வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்.” என உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.

இதைப் படித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என உறுதியளித்தார்.

இந்நிலையில், சௌமியாவின் வீட்டிற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று, அவருக்கு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்வதற்கான பணி ஆணையை வழங்கினார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சௌமியாவிடம் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரின் உடனடி நடவடிக்கை அப்பெண்ணின் குடும்பத்தினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories