தமிழ்நாடு

“மாணவர்களின் உயிர்காக்கும் துணிச்சலான முடிவை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘தினத்தந்தி’ பாராட்டு !

மாணவர்களின் உயிர்காக்கும் துணிச்சலான முடிவு என தினத்தந்தி தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.

“மாணவர்களின் உயிர்காக்கும் துணிச்சலான முடிவை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘தினத்தந்தி’ பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்யும் உயிர்காக்கும் முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்தது மிக மிக பாராட்டுக்குரியது என தினத்தந்தி தலையங்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளது.

தினத்தந்தி நாளிதழில் வெளியான தலையங்கம் வருமாறு:-

மாணவர்களின் உயிரா? தேர்வா? எது முக்கியம் என்ற கேள்வி எழுந்தபோது, தமிழக அரசுக்கு, ‘மாணவர்களாம் இளம் பிஞ்சுகளின் உயிர்தான் முக்கியம்’, ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்’ என்ற வகையில் பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்து மிக துணிச்சலான முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து இருக்கிறார்.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. 3-வது அலையும் வந்துவிடுமோ? என்ற அச்சமும் உள்ளது. தடுப்பூசி போடுவதை எடுத்துக்கொண்டால், ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

ஆக பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்ற வகையில், அவர்களுக்கு தடுப்பூசியும் போட முடியாது. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டது.

தமிழக அரசும் என்ன முடிவை எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்த நிலையில், ஏறத்தாழ 9 லட்சம் மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத இருந்தார்கள். பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்தினால்தான் உயர்கல்விக்கு போகமுடியும் என்ற கருத்தும், இப்போதுள்ள பரவலில் பிளஸ்-2 தேர்வு வேண்டாம் என்ற மற்றொரு கருத்தும் நிலவியது.

“மாணவர்களின் உயிர்காக்கும் துணிச்சலான முடிவை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : ‘தினத்தந்தி’ பாராட்டு !

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், 3 நாட்களாக பள்ளிக்கூட அளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்திருக்கிறார்.

மருத்துவ நிபுணர்கள் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில், 3-வது அலையும் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தடுப்பூசி போடாத மாணவர்களை தேர்வு எழுத வரச்செய்வது தொற்றை அதிகரிக்க செய்யும் என்ற ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் உளவியல் நிபுணர்கள் தேர்வை தள்ளிவைத்துக் கொண்டே போனால், மாணவர்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாக்கும் என்று ஆலோசனை கூறினர்.

இதையெல்லாம் சீர்தூக்கி பார்த்து இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வை ரத்து செய்யும் உயிர்காக்கும் முடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்தது மிக மிக பாராட்டுக்குரியது. இந்தநிலையில், உயர்படிப்புக்கு செல்வதற்காக, எந்த வகையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது? என்பதை முடிவுசெய்ய பள்ளிக்கூட முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்துள்ளார். அந்தக்குழு அளிக்கும் பரிந்துரையின் பேரில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பல கல்வியாளர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து இருக்கிறது. அந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வுக்கு செயல்முறைத்தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அதனையும், உள் மதிப்பீட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கினால் எந்தவித சட்டச்சிக்கல்களும் இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். எப்படி மாணவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து பிளஸ்-2, சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வுகளை எழுத வைத்தால் கொரோனா பரவல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் இருக்கிறதோ, அதே அச்சம், அதே காரணங்கள் நீட் தேர்வுக்கு பொருந்தும்.

எனவே பிரதமரும், ஒன்றிய அரசாங்கமும் இந்த ஆண்டு நீட் உள்பட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிடவேண்டும் என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories