தமிழ்நாடு

“கரூர் மாவட்டத்தில் யாருக்கு உணவு தேவைப்பட்டாலும் இந்த எண்களுக்கு அழையுங்கள்” : அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை சிறப்பு உணவளிக்கும் திட்டம் மூலம் 3 வேளை உணவு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

“கரூர் மாவட்டத்தில் யாருக்கு உணவு தேவைப்பட்டாலும் இந்த எண்களுக்கு அழையுங்கள்” : அமைச்சர் செந்தில்பாலாஜி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களின் பசியினைப் போக்கிடும் உன்னதப் பணியில் தி.மு.கவினர் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தமிழக முதல்வரின் வேண்டுகோளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தி.மு.க-வினரும் சிரமேற்கொண்டு செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு முடியும் வரை உணவு தேவைப்படுபவர்களுக்குச் சிறப்பு உணவளிக்கும் திட்டம் மூலம் 3 வேளை உணவு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு, கரூர் ஓபிஜி பவர் ஜெனரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.50 லட்சம், வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை, சிவா டெக்ஸ்டைல்ஸ் தலா ரூ.7.5 லட்சம், பொறியாளர் சந்திரசேகரன் ரூ.1 லட்சம் என ரூ.66 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஊரடங்கு காலத்தில் கரூர் மாவட்டத்தில் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் யாரும் உணவின்றி இருக்கக்கூடாது என்பதால் சிறப்பு உணவளிக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.

இதன்படி மாவட்டத்தில் எந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவு தேவை என்றாலும் உணவு விநியோகிக்கப்படும். உணவு தேவைப்படுபவர்கள் 94987 47644, 94987 47699 ஆகிய இரு செல்போன் எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

மறுநாள் காலை உணவு தேவை என்பவர்கள் முதல் நாள் இரவு 8 மணிக்குள்ளும், மதிய உணவு தேவை என்பவர்கள் அன்றைய தினம் காலை 8 மணிக்குள்ளும், இரவு உணவு தேவை என்பவர்கள் மதியம் 2 மணிக்குள்ளும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஊரடங்கு முடியும் வரை 3 வேளையும் உணவு தேவை என்பவர்கள் முதல் அழைப்பிலேயே அதனைத் தெரிவித்துவிடலாம். ஒவ்வொரு முறையும் அழைக்கத் தேவையில்லை. சிறப்பு உணவு வழங்கும் திட்டம் மே 30 முதல் ஊரடங்கு முடியும் வரை செயல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories