தமிழ்நாடு

“பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அறிவுக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் அனந்தகிருஷ்ணன் மறைவு தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பது - கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

“பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம்.அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :-

“அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்மஸ்ரீ எம். அனந்தகிருஷ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாணியம்பாடியில் பிறந்து இந்தத் தரணி போற்றும் வகையில் - நேர்மையான - அறிவுக்கூர்மை மிகுந்த கல்வித்தொண்டாற்றிய அவர் மாணவ சமுதாயத்தின் கலங்கரை விளக்கம். கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராக இருந்த அவரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்தார். அப்பணியில் இருந்த போது - பல்கலைக்கழக மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை அளிக்கும் உன்னத உட்கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பியவர் அனந்தகிருஷ்ணன்.

“பத்மஸ்ரீ அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பு” : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“வெளிப்படைத்தன்மை மிகுந்த நிர்வாகம் - மாணவர்களின் கல்வி முன்னேற்றம்” ஆகிய இரண்டையும் தனது இரு கண்கள் போல் கருதி எந்தப் பொறுப்பிலும் பணியாற்றிய அவர்தான் கழக ஆட்சியில் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்குக் காரணமான கதாநாயகனாக இருந்தவர். அனந்தகிருஷ்ணன் கொடுத்த அறிக்கைதான் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கண்களைத் திறந்தது என்பதை இன்று பொறியாளர்களாக இருக்கும் - மருத்துவர்களாக இருக்கும் ஒவ்வொரு கிராமப்புற - நடுத்தர ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் நன்கு உணருவர். அது மட்டுமின்றி- அவர் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பப் புரட்சி நடைபெறுவதற்கான முதலமைச்சரின் ஆலோசகராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.

பொறியியல் கல்விச் சேர்க்கையில் ஒற்றைச் சாளரமுறையை முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கும், தமிழ் இணைய மாநாடு நடத்தி, இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்தவர்.

“அறிவுக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் அனந்தகிருஷ்ணன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் போற்றிய தலை சிறந்த கல்வியாளர். ஏன், இந்த நாடே போற்றும் நிர்வாகத் திறன் படைத்தவர். அர்த்தமிகுந்த- அறிவுசார்ந்த கல்வி கட்டமைப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடன் தனது இறுதி மூச்சு வரை பயணித்த- தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளரை இழந்திருப்பது - கல்வியுலகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.

டாக்டர் மு. அனந்தகிருஷ்ணன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும் - உறவினர்களுக்கும் - ஆசிரியர், பேராசிரியர் மற்றும் இன்று வரை அவர் மீது தீராத அன்பு செலுத்தி வரும் மாணவ சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories