
கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் இரா.ஜவகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இடதுசாரி சிந்தனையாளரான இரா.ஜவகர் “கம்யூனிசம் - நேற்று-இன்று-நாளை” என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இவரின் பேச்சுக்களும் செயலும் எண்ணற்ற இளம் பத்திரிக்கியாளர்களுக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில், பத்திரிக்கையாளர் இரா.ஜவகர் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு :
“மூத்த பத்திரிகையாளரும், பொதுவுடைமைச் சிந்தனையாளருமான இரா.ஜவகர் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன்.
அவரது மறைவு முற்போக்குச் சிந்தனை உலகிற்குப் பேரிழப்பாகும். இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த இரா.ஜவகர், அரிய நூல்களைப் படைத்தளித்தவர் என்பதுடன், தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும், மாறாத பற்றும் கொண்டவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பத்திரிகையாளர்கள், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.








