தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்... அற்புதம்மாள் நெகிழ்ச்சியுடன் நன்றி!

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்... அற்புதம்மாள் நெகிழ்ச்சியுடன் நன்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ள நிலையில் தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவைப்பட்டால் பரோல் வழங்க நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

பேரறிவாளன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், “ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, பேரறிவாளனின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி!” என நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories