தமிழ்நாடு

“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி!

“மாதாந்திர மின் கணக்கீடு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒரு வார காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து, அங்கேயே 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைத்துள்ளது போல, TNPL நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்குக் கூடுதலாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் இத்தாலியில் இருந்து வருவதற்கு மாத இறுதியாகும். இதனால், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூன் 2-வது வாரமாகிவிடும். அவசர, அவசியம் கருதி, சேலம் இரும்பாலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதுடன், அங்கேயே 500 படுக்கைகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அந்த அடிப்படையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து இங்குள்ள சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்கான பணிகள் நாளை தொடங்கி ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1.5 கி.மீ தூரத்திற்கு குழாய் அமைத்து ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும். இதற்கு ஆலை அதிகாரி ஒருவர் நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் பழைய அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் 25-ம் தேதி முதல் அது செயல்பட தொடங்கும். தொடர்ந்து, அடுத்தடுத்து 7 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்.

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10-ம் தேதி மின் நுகர்வோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories