தமிழ்நாடு

“புயல் வேகத்தில் செயல்படும் தமிழக அரசு” - கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சம் வழங்குவதாக கி.வீரமணி அறிவிப்பு!

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக தி.க தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

“புயல் வேகத்தில் செயல்படும் தமிழக அரசு” - கொரோனா நிவாரண நிதி ரூ.10 லட்சம் வழங்குவதாக கி.வீரமணி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்குவதாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளரும், தி.க தலைவருமான கி.வீரமணி அறிவித்துள்ளார்.

கொரோனா கடும் தொற்று அலை பேரபாயமாக வீசிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், நமது இயக்கத்தின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற தொண்டறச் சிந்தனையோடு, கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெரியார் திடலில் - சுற்று வட்டார மக்களுக்கு நல்ல வகையில் பயன்பட்டுவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனை - தமிழ்நாடு அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார் - மேலும் பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது என்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வீச்சு நாளுக்கு நாள் அதிகமாகி, பாதிப்புக்குள்ளாவோர் தொகையும் அதிகரிக்கும் வேதனை பெருகுகிறது.

மருத்துவ அடிக்கட்டுமான வசதிகளும், மருத்துவமனைகளும், படுக்கைகளும், மருத்துவப் பணியாளர்களின் தன்னலம் துறந்த தொண்டறமும், இவற்றை முன்னுரிமையாகக் கொண்டு ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘ என்பதற்கொப்ப நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இமை துஞ்சா கடமையாற்றலும், கண்காணிப்புடனும், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் புயல் வேகத்தில் செயல்பட்டாலும், நோயாளிகள் எண்ணிக்கை நாளும் பெருகுவதால் ஊரடங்கு தொடங்கி, 3, 4 நாட்களாகியும் - எண்ணிக்கை குறையவில்லை என்பதோடு சென்னை பொது மருத்துவமனையான ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே ஆம்புலன்ஸ்மூலம் கொண்டு செல்லப்பட்டோர்- மருத்துவமனையில் படுக்கை இல்லாமல், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸ் வேனிலேயே நால்வர் இறந்தனர் என்ற துயரச் செய்தி நம் நெஞ்சை வாட்டுகிறது; இதயத்தைக் கசக்கிப் பிழியச் செய்கிறது!

இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி, அப்பகுதி ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் எவ்வித வேறுபாடும் பார்க்காமல், மருத்துவ உதவிகள் வழங்கிவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனை என்ற சிறிய மருத்துவமனையை கொரோனா கொடுந்தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க - தமிழக அரசின் மருத்துவத் துறை எப்படி, எந்தப் பிரிவுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்து, துடிப்போடு விரைந்து செயல்படும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் தொலைபேசிமூலம் கூறி, கடிதமும் அனுப்பினோம்.

அவர்களும் மிக்க மகிழ்ச்சியுடன் இந்த யோசனையை - வேண்டுகோளை ஏற்று, மருத்துவமனையை தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அதற்கான ஏற்பாட்டினை அதிகாரிகள் மூலம் செய்யத் தொடங்கிவிட்டார் என்பதை மிகுந்த அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். தமிழக தி.மு.க. அரசுக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதுள்ள 30 படுக்கை வசதியை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேலும் விரிவாக்கிட திட்டமிடுவார்கள் என்று நம்புகிறோம்.

‘‘இருட்டைக் குறை கூறுவதைவிட, ஒரு சிறு மெழுகுவத்தியை ஏற்றுவது சிறந்தது’’ என்பது போன்ற மிகவும் எளிமையான சிறு துளி முயற்சி இது என்றாலும், மற்றவர்களும் வாய்ப்புள்ள இடங்களில் இம்முறையைப் பின்பற்றலாமே!

போர்க்கால நடவடிக்கை, புயல் வேகத்தில் தமிழக தி.மு.க. அரசால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சீரிய முறையில் நடைபெறுகையில், நாமும் நம்பிக்கை அளிக்கவேண்டாமா?

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நன்கொடையையும் முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு அளிக்கிறோம்!

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories