
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த அந்தப் பெண்மணி நேற்று முன்தினம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் திருவேங்கடபுரம் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கொரோனாவால் உயிரிழந்த காரணத்தால் உறவினர்கள் உள்ளிட்ட ஊர் மக்கள் யாரும் அந்தப் பெண்ணின் உடலை புதைக்க முன்வரவில்லை. இந்த செய்தி தி.மு.கவைச் சேர்ந்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பாபுக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தி.மு.கவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் பாலாஜி, முன்னாள் வார்டு உறுப்பினர் பிரேம்குமார் மற்றும் ஜெயகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து அந்தப் பெண்ணின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அவர்களது உறவினர்களும், ஊழியர்களும் புதைக்க முன்வராத நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.








