தமிழ்நாடு

"ஆக்சிஜன் அளவை அதிகரிக்காத மோடி அரசு.. தமிழக மக்களின் உயிர் முக்கியமில்லையா?"- கொதிக்கும் சு.வெங்கடேசன்!

தமிழகத்திற்கு ஒதுக்கும் ஆக்சிஜன் அளவை உயர்த்த வேண்டும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

"ஆக்சிஜன் அளவை அதிகரிக்காத மோடி அரசு.. தமிழக மக்களின் உயிர் முக்கியமில்லையா?"-  கொதிக்கும் சு.வெங்கடேசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு ஒதுக்கும் ஆக்சிஜன் அளவை உயர்த்த வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "தேசிய சுகாதார முகமையின் இயக்குனர் டாக்டர் சஞ்சய் ராய் அவர்கள் வெளியிட்டுள்ள மே 5 தேதியிட்ட "மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம்" (D No. Z 20015/ 46/ 2021- ME - I) பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு 280 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் ஆக்சிஜன் தேவையை செங்குத்தாக அதிகரித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி 500 மெட்ரிக் டன்னாக தமிழகத் தேவை உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு சார் நிறுவனங்களின் சில மதிப்பீடுகளே 400 மெட்ரிக் டன்கள் என்று கூறுகிறது.

ஆனால் மேற்கண்ட கடிதம், அதில் உள்ள திட்டம் இது பற்றி மௌனம் சாதிக்கிறது. அதன் பொருள், தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு இல்லை. நான் ஒரு கேள்வியை மன வலியோடு எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா?

செவ்வாய் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அங்கு கோவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 447 பேரில் 309 பேர் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள். இது தனித்த உதாரணம் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுதான் நிலைமை.

பல அரசு, தனியார் மருத்துவமனைகள் பல சிரமங்களோடும், உயிர் பயத்தோடும் வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகக் கூடும்.

இந்த நிலைமையில் ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம் தமிழகத்திற்கு நீதி தரவில்லை. தமிழக அரசின் தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பின்பும் ஒதுக்கீடு அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நான் வருத்தத்தோடு சொல்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசே பதில் சொல்ல வேண்டிவரும். இது அவசர வேண்டுகோள். காலதாமதம் எதுவுமின்றி உங்கள் தலையீட்டை எதிர் நோக்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories