தமிழ்நாடு

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட் நிறுவ ஆகும் செலவு இவ்வளவுதானா? - விவரிக்கும் சி.ஐ.டி.யு

கொரோனா இரண்டாவது அலை நெருக்கடியான இந்தத் தருணத்தில் மீண்டும் திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட் நிறுவ ஆகும் செலவு இவ்வளவுதானா? - விவரிக்கும் சி.ஐ.டி.யு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சிராப்பள்ளி பி.எச்.இ.எல். (பெல் - BHEL) நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது சாத்தியமானதுதான். தொழிலாளர் பலம், பொறியாளர்களின் திறமை, அறிவுசார் சொத்துரிமை இவற்றைப் பயன்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்து இந்த நிறுவனத்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். இதற்கு ஒப்புதல் தர வேண்டியது தில்லியில் உள்ள தலைமை அலுவலகம் தான் என்கின்றனர் தொழிலாளர்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தொற்றாளர்களைக் காப்பாற்ற ஆக்சிஜன் முக்கியமாகும். ஏற்கனவே ஆக்சிஜன் உற்பத்தி செய்து வந்த பி.எச்.இ.எல். நிறுவனத்தை மீண்டும் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி பி.எச்.இ.எல். நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தித் தளத்தில் ஒரு மணிநேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தித் தளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். காலப்போக்கில் தொழிலாளர்களை குறைக்க வேண்டும் என்றும், இங்கு உற்பத்தி செய்வதை விட வெளியில் வாங்கினால் செலவு குறையும் என்றும் நிர்வாகம் யோசித்து உற்பத்தியை நிறுத்திவிட்டது.

திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட் நிறுவ ஆகும் செலவு இவ்வளவுதானா? - விவரிக்கும் சி.ஐ.டி.யு

ஆக்சிஜன் உற்பத்திக்கென வாங்கப்பட்ட கருவிகளில் இருந்த காப்பர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டன. அதற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை நெருக்கடியான இந்தத் தருணத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பி.எச்.இ.எல். (சி.ஐ.டி.யு.) தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.அருணனிடம் பேசிய போது, "ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போதைய நிலையில் அந்த பிளாண்டை பயன்படுத்த முடியாது. புதிதாக ஒரு பிளாண்ட் நிறுவ வேண்டும். அதற்கு குறைந்தது ரூ.3.50 கோடி செலவாகும். ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்கும் முடிவை திருச்சிராப்பள்ளி நிர்வாகம் மட்டும் எடுக்க முடியாது. தில்லியில் உள்ள தலைமை அலுவலகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஒப்புதல் அளித்தால் இரண்டே மாதத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஆயிரக்கணக்கான உயிர்களை தேசத்தின் பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல். நிறுவனமும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் காப்பாற்றினார்கள் என்ற பெருமை கிடைக்கும். பி.எச்.இ.எல். எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

புதிய ஆக்சிஜன் பிளாண்ட் அமைக்க வேண்டுமென்பதுதான் தொழிலாளர்களின் விருப்பம். எங்களது எண்ணமும், கோரிக்கையும் நிறைவேற வேண்டும். தில்லி தலைமை அலுவலகம் ஒப்புதல் வழங்க வேண்டும்" என்றார். பி.எச்.இ.எல். நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற திருச்சிராப்பள்ளி அ.அன்வர் உசேனிடம் பேசியபோது, "புதிய பிளாண்ட் அமைப்பதற்கு ரூ.3.50 கோடி செலவழிப்பது ஒன்றும் நிறுவனத்திற்கு பெரிய தொகை இல்லை.

இந்தக் காலத்தில் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி பி.எச்.இ.எல். லாபம் ஈட்டியிருக்கிறது. இதில் ரூ. 12கோடியை ஒதுக்கீடு செய்தால் மூன்று பிளாண்ட்களை நிறுவ முடியும். நிறுவ வேண்டும். தற்போதுள்ளவை நவீன இயந்திரங்கள் என்பதால் கடந்த காலத்தில் உற்பத்தி செய்ததை விட இப்போது கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும்.

இந்தக் கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் முன்னெடுக்க வேண்டும். மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் எந்த அரசு அமைந்தாலும் முதல் நடவடிக்கை பிஎச்இஎல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதாக இருக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல். தொழிலாளர்கள் இந்தப் பணிக்கு தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள்"" என்றார்.

banner

Related Stories

Related Stories