தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கே ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதா?

தமிழக முதல்வர் கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்பதே சரியானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கே ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் நிலையில்  மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனை ஆந்திராவிற்கு அனுப்புவதை ரத்து செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்பதே சரியானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் வீச்சு நாளும் அதிகமாகவே ஆகி வருகிறது. திடீரென்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், பலியானோர் தொகையும் கூடுதலாகி வருவது நம் நெஞ்சை கசக்கிப் பிழிவதாக உள்ளது. அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் என்ற பிராண வாயு பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் வேதனையான - சோதனையான பரிதாப நிலை!

மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டு, சிறீபெரும்புதூர் ஆலையிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாட்டின் தேவை 220 மெட்ரிக் டன்தான்; அதனிடம் தற்போது 400 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் இருப்பதால் தேவைக்குமேல் இருப்பதாகக் கணக்கிட்டுக் கூறியிருப்பது தவறான கணக்காகும். இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பினால், கொரோனா பரவி வரும் நிலையில் இங்கு ஆக்சிஜன் கடும் பற்றாக்குறை ஏற்படக் கூடும்; எனவே, மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதை நிறுத்தவேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது முற்றிலும் நியாயமானது.

அக்கோரிக்கையை ஏற்று, மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆக்சிஜனை அனுப்புவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இது குறுகிய மனப்பான்மை அல்ல; சுய நலம் அல்ல; தமிழ்நாட்டு மக்கள் உயிர் காப்பு என்பதற்கு முன்னுரிமை மட்டுமல்ல; இங்கிருந்து அனுப்பிவிட்டு, பிறகு மற்ற விடங்களிலிருந்து இறக்குமதி செய்வது தேவையற்ற இரட்டிப்பு வேலையைத் தடுக்கும் புத்திசாலித்தனமும் ஆகும்.

எனவே, தமிழ்நாட்டுக்கே பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories