தமிழ்நாடு

அமெரிக்கன் கல்லூரியில் விவேக் : சார் என்னை அடிக்கணும்னா அடிங்க.. நடிகர் ஷிஹான் ஹுசைனின் உருக்கமான பதிவு!

நடிகர் விவேக் அவர்களுடன் கல்லூரியில் பழகிய நண்பரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி எழுதிய பதிவு சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.

அமெரிக்கன் கல்லூரியில் விவேக் : சார் என்னை அடிக்கணும்னா அடிங்க.. நடிகர் ஷிஹான் ஹுசைனின் உருக்கமான பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் அவர்களுடன் கல்லூரியில் பழகிய நண்பரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி எழுதிய பதிவு சமூக வலைதளங்களில் வைராக பரவி வருகிறது.

இதுதொடர்பாக நடிகர் ஷிஹான் ஹுசைனி எழுதிய முகநூல் பதிவு பின்வருமாறு:

நெஞ்சம் கனக்கிறது !

இந்த உலகம் ஒரு மாபெரும் கலைஞனை இழந்துவிட்டது. இரண்டு கல்லூரிகளில் விவேக் எனக்கு ஓராண்டு ஜூனியர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் கவிதாலயா என்ற மாபெரும் நடிப்பு கல்லூரி. எங்கள் சந்திப்பு அமெரிக்கன் கல்லுரியில் ஒரு தகராறில் ஆரம்பித்தது. “டேய் உன்னை நக்கல் பண்ணி ஒரு ஜூனியர், ஆடிட்டோரியம்லே ட்ராமா போட்டுக்கிட்டு இருக்கானாம். ஒரே கைதட்டாம். வா மச்ச்சான் போய் சாத்தலாம் னு சில பசங்க வந்து என்னை கூப்ட்டானுங்க”

ஒரு மாசத்துக்கு முன்னால் தான் நான் கல்லுரியில் ஒரு மாபெரும் கராத்தே டெமோ போட்டு அது பெரிய டாக். அந்த கராத்தே டெமோவை உல்டா பண்ணி, கேலி நாடகம் போட்டு கை தட்டு வாங்கிக்கொண்டிருந்தவனை தேடி நானும் என் நண்பர்களும் கிளம்பினோம். பெரிய தகராறு நடக்க இருப்பதை உணர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் வழியில் எங்களை தடுத்து நிறுத்தினர்.

நாடகம் பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த ஜூனியர் சமாதானம் பேச அழைக்கப்பட்டார். அங்கிருந்த பேசிரியர்களை தள்ளிவிட்டு அந்த பையன் சட்டையை புடித்தேன். என்னை நேராக பார்த்த அந்த பையன் “சார் என்னை அடிக்கணும்னா அடிங்க. உங்க டெமோ எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். என்னாலே உங்களை மாதிரி ஓடு, செங்கல் உடைக்க முடியாது.. அதனாலே அப்பளம் வைத்து உடைச்சேன்! அவ்வளவுதான் அண்ணா!” சட்டையை விட்டு பலமாக சிரிச்சேன். நாடகம் மீண்டும் தொடர்ந்தது.. நானும் அதை பார்த்து அனைவரோடு பலமான கைதட்டினேன்.

அந்த பையன் தான் சில ஆண்டுக்கு பின்னால், உலகம் போற்றிய ‘நடிகர் விவேக் !’

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விவேக் பெரிய ஹிட். இவர் காமெடி நாடகம் என்றாலே மாணவர்களும், ஆசிரியர்களும் மிஸ் பண்ண மாட்டார்கள். கல்லுரியில் யாரையும் விட்டு வைக்க மாட்டார். இவர் கதாகாலச்சேபம் ரொம்ப பாப்புலர். எல்லோரையம் மிமிகிரி, கிண்டல் பண்ணுவார்.

அணைத்து கல்லூரி தமிழ் நாடக போட்டி என்றால் இவரை அனுப்புவார்கள். ஆங்கில போட்டிகளுக்கு நானும் என் குழுவும் செல்லும். எப்போதுமே நாங்கள்தான் பரிசுகளை அள்ளி செல்லுவோம். இவர் நாடகத்தை நான் மிஸ் பண்ண மாட்டேன். என் நாடகங்கள் அனைத்துக்கும் விவேக் வருவார். மிக நல்ல நண்பர்கள் ஆனோம். கல்லூரி எதிரே உள்ள ஹோட்டலில் டீ சமோசா சாப்பிட்டு மணிக்கணக்கில் கதைகளை விவாதிப்போம்.

சினிமாவில் கே.பாலச்சந்தர் மூலமாக மட்டுமே அறிமுகமாக வேண்டும் என்று கூட்டு கனவு காண்போம். 1987 ல் ' புன்னகை மன்னன் ' படம் மூலம் பாலச்சந்தர் சார் என்னை அறிமுகப்டுத்தியபோது என்னை பாராட்டிய முதல் நபர் விவேக் தான். அதே ஆண்டு எனக்கு அடுத்ததாய் விவேக்கை பாலசந்தர் சார் ‘மனத்தில் உறுதி வேண்டும்’ படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

பல ஆண்டுகள்.. பல சந்திப்புகள்... அவரோடு இணைத்து நான் நடித்த முதல் மற்றும் கடைசி படம், விஜய் நடித்த 'பத்ரி!' விவேக் தமிழ் பட உலகத்தின் ஈடு இணையிலா மாபெரும் நகைசுவை நடிகர், சமூக போராளி.. படைப்பாளி.

அவரது மரணம் மாபெரும் இழப்பு எனக்கும், திரை உலகத்துக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் மகன் பிரசன்னாவை இழந்து இப்போது விவேக்கை இழந்து தவிக்கும் சகோதரி அருள்செல்வி விவேக்குக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விவேக் பாஸ் .... வில் மிஸ் யூ பாஸ் !

banner

Related Stories

Related Stories