தமிழ்நாடு

"வேளச்சேரியில் பைக்கில் இருந்த VVPAT இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவு" - சத்யபிரதா சாகு அதிர்ச்சி தகவல்!

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட VVPAT இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யிபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

"வேளச்சேரியில் பைக்கில் இருந்த VVPAT இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவு" - சத்யபிரதா சாகு அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் வேளச்சேரியில் முறையாக அதிகாரிகள் ஏற்பாடு செய்த வாகனத்தில் எடுத்துச் செல்லாமல் தனிநபர் ஒருவர் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் எடுத்துச்சென்றதை பார்த்த பொதுமக்கள் அந்த நபரை சிறைபிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என்றும், பழுதான 2 விவிபேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

மேலும் இதுகுறித்து வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தேர்தல் ஆணையத்திடம், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி புகார் மனு அளித்திருந்தார்.இந்நிலையில், பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், "வேளச்சேரி தொகுதியில் பைக்கில் விவிபேட் கொண்டு செல்லப்பட்ட செயல் முற்றிலும் தவறானது. மேலும் இந்த விவிபேட் இயத்திரம் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு, 15 வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக அரசியல் கட்சிகள் சார்பாகப் புகார்கள் வந்துள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே வேளச்சேரியில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு தேர்தல் நடத்துவதா வேண்டாமா என்பது குறித்துத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories