தமிழ்நாடு

பெண்கள் மீது மோடிக்கு அக்கறை இருந்தால் SV.சேகர், H.ராஜா போன்றோரை கைது செய்யவேண்டும் : தீக்கதிர் தலையங்கம்

பெண்களின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.726 கோடியில் 678 கோடியை வெட்டிச் சுருக்கி இந்தாண்டு பட்ஜெட்டில் வெறும் 48 கோடி மட்டுமே மோடி அரசு ஒதுக்கியிருக்கிறது.

பெண்கள் மீது மோடிக்கு அக்கறை இருந்தால் SV.சேகர், H.ராஜா போன்றோரை கைது செய்யவேண்டும் : தீக்கதிர் தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக பெண்களின் பாதுகாப்பு குறித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி முதலைக்கண்ணீர் வடித்தார். ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள். ஆனால் பிரதமர் பேசி முடித்த அடுத்த வினாடியே பிரதமரின் புளுகுகள் சமூக வலைதளத்தில் சந்திசிரித்தது.

பிரதமர் மோடியின் ஆட்சியில்தான், பெண்களின் உலகளாவிய பாலினச் சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியா 112 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக பொருளாதார பாலின சமத்துவமின்மை பிரிவில் மொத்தமுள்ள 153 நாடுகளில் இந்தியா 35.4 சதவிகித புள்ளிகளைப் பெற்று 149 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த நிலையிலும்கூட, பெண்களின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் கடந்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.726 கோடியில் 678 கோடியை வெட்டிச் சுருக்கி இந்தாண்டு பட்ஜெட்டில் வெறும் 48 கோடி மட்டுமே மோடி அரசு ஒதுக்கியிருக்கிறது.

‘பெண் குழந்தையைக் காப்போம், பெண்குழந்தைக்கு கற்பிப்போம்’, `பெண் குழந்தை பாதுகாப்பு’, `வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கான திட்டம்’ உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை. இதுதான் பெண்கள் மீது மோடி அரசு காட்டும் அக்கறையின் லட்சணம். மேலும், தமிழக பெண்களை இழிவுபடுத்துவதாகவும் மோடி ஆவேசப்பட்டிருக்கிறார்.

பெண்கள் மீது மோடிக்கு அக்கறை இருந்தால் SV.சேகர், H.ராஜா போன்றோரை கைது செய்யவேண்டும் : தீக்கதிர் தலையங்கம்

உண்மையில் தமிழக பெண்கள் மீது மோடிக்கு அக்கறை இருக்குமானால் முதலில் குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா உள்ளிட்டோரை கைது செய்யவேண்டும். அவர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசாத பேச்சு ஏதாவது இருக்கிறதா?

பொள்ளாச்சியில் பல இளம்பெண்களை கடத்தி அதிகாரத் திமிரில் சீரழித்த கயவர் கூட்டம் பற்றி ஏன் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை? காரணம் பா.ஜ.கவை தமிழகத்தில் தூக்கிச் சுமக்கும் அ.தி.மு.கவின் தூண்களும் இதில் அடக்கம் என்பதும் அவருக்கும் தெரியும்.

அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல, காவல்துறை பெண் எஸ்.பிக்கே பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை. பெண் எஸ்.பியை பாலியல் சீண்டல் செய்த சிறப்பு டி.ஜி.பி இதுவரை கைது செய்யப்படவில்லை. இதுதான் பெண்களுக்கு அ.தி.மு.க கொடுக்கும் பாதுகாப்பின் லட்சணம். நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம் என்பார்கள்.

பெண்கள் மீது மோடிக்கு அக்கறை இருந்தால் SV.சேகர், H.ராஜா போன்றோரை கைது செய்யவேண்டும் : தீக்கதிர் தலையங்கம்

அதுபோல் பா.ஜ.கவின் யோக்கியதையையும் தமிழக பெண்கள் நன்கு அறிவார்கள். கத்துவா கிராமத்தில் 8 வயது சிறுமியை பா.ஜ.கவை சேர்ந்த கயவர்கள் பாலியல் வன்படுகொலை செய்ததை மறக்க முடியுமா? குற்றவாளிகளை பாதுகாக்க பா.ஜ.க கொடியோடு, தேசிய கொடியையும் ஏந்தி தேசத்தையே தலை குனியவைத்ததையும் தமிழக மக்கள் அறிவார்கள்.

உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த கொடியவனான பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை, பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் காப்பாற்ற முயன்றதை மறைக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் அவசரச் சட்டம் போடும் மோடி, பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற மறுப்பது ஏன்? ஆக எந்த வகையிலும் பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச மோடிக்கும், பாஜகவிற்கும் துளி கூட அருகதையில்லை.

- தீக்கதிர்

banner

Related Stories

Related Stories