தமிழ்நாடு

8 வழி சாலை எதிரொலி : திருவண்ணாமலையில் பிரசாரத்திற்கு வந்த முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக முதல்வர் வருகையின் போது, காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி விவசாயிகள் கருப்புக்கொடி காண்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 வழி சாலை எதிரொலி : திருவண்ணாமலையில் பிரசாரத்திற்கு வந்த முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்கான பணியை தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த முறையற்ற தொகுதி பங்கீடு காரணமாக அ.தி.மு.க தொண்டர்கள் பலரும், பா.ஜ.க வேண்டாம் என்றும், அ.தி.மு.க வேட்பாளர்களை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் செய்யாமல் எப்படி ஓட்டுக் கேட்டு வரலாம் என அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பல இடங்களில் மக்கள் விரட்டி அடித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, செங்கம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் வருகையின் போது, காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி விவசாயிகள் கருப்புக்கொடி காண்பித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 வழி சாலை எதிரொலி : திருவண்ணாமலையில் பிரசாரத்திற்கு வந்த முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாயிகள்!
DIGI TEAM 1

எட்டு வழி சாலை அமைக்க கூடாது என விவசாயிகள் பல கட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டம் குறித்து எந்தவித பதிலும் கூறாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க அரசை கண்டிக்கும் வகையில், மண்மலை கிராமத்தில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடி செல்லும் வழியில் அவரது வாகனத்திற்கு கருப்புக்கொடி காண்பிக்க முயற்சித்தனர்.

அப்போது, கருப்புக்கொடி ஏந்தி சாலைகளில் ஊர்வலமாக வந்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிகமாக எட்டு வழி சாலையில் பாதிக்கும் தொகுதியிலேயே வந்து தமிழக முதல்வர் பிரச்சாரம் செய்வது தங்களுக்கு வேதனை அளிக்கிறது.

இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் அந்தந்த மாவட்டங்களில் கருப்புக்கொடி காண்பித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, செங்கம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் வருகைக்கு இன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி கருப்புக்கொடி காண்பித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் அவர்களது நிலத்திற்கு நேரடியாக சென்று மிரட்டிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories