தமிழ்நாடு

‘உன்னை என்ன செய்றேன் பாரு..' : தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு!

வாகனத்தை நிறுத்தியதால், அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘உன்னை என்ன செய்றேன் பாரு..' : தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தபோதும், அ.தி.மு.கவினர் தருமபுரி, பழனி என தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்களைத் தாராளமாக வழங்கி வருகின்றனர். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இருந்த வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் போடி தாலுக்காவில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரு தொகுதியில் போட்டியிட, வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தபோது, 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும். அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் வீதிமீறலைக் கண்டும் காணாமல் தேர்தல் அதிகாரிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

‘உன்னை என்ன செய்றேன் பாரு..' : தேர்தல் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு!

இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு, வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகளை ஒருமையில் பேசி மிரட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துப்பட்டி விலக்கு அருகே நேற்று தேர்தல் பணியாற்றும் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காரில், கடம்பூர் ராஜு வந்திருக்கிறார். அவருடன், ஆதரவாளர்களும் காரில் வரிசையாக வந்துள்ளனர்.

அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், கடம்பூர் ராஜுவின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், காரிலிருந்து இறங்கி ‘இன்னும் பத்து நாளைக்குத்தான் நீ ஆடுவ.. அதுக்குப்பிறகு உன்னை என்ன பண்ணுறேன் பாரு..’ என்று பறக்கும்படை குழுத் தலைவரை மிரட்டியுள்ளார். அப்போது அவர் ‘எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்கிறோம். ஒத்துழைப்பு கொடுங்கள்’ என கூறியுள்ளார்.

ஆனால், அமைச்சர் எந்த விளக்கத்தையும் கேட்காமல், தொடர்ந்து அவரை ஒருமையில் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேர்தல் பறக்கும்படை குழுத் தலைவர், உயிர் பயத்தில் நாலாட்டின் புதூர் காவல்நிலையத்தில் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார்.

அரசு அலுவலரை அமைச்சர் ஒருவர் மிரட்டி இருப்பது, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories