தமிழ்நாடு

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை : பழிக்குப் பழியாக தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்!

இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடியை இரண்டு பேர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை : பழிக்குப் பழியாக தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் காளிப்பாண்டி. இவரது மகன் பாலமுருகன். அடிதடி கட்டப்பஞ்சாயத்து என பசுவந்தனை பகுதியில் ரவுடியாக வலம் வந்திருக்கிறார் பாலமுருகன். இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பாலமுருகன் கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். மேலும், கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி, கோவில்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்து போட்டுவிட்டு காந்தி நகர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென பாலமுருகனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட பாலமுருகன், அவர்களிடம் இருந்து தப்பிக்க சாலையில் தலைதெறிக்க ஓடியிருக்கிறார். ஆனாலும் விடாமல் அவரை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்ற மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை : பழிக்குப் பழியாக தூத்துக்குடியில் பயங்கர சம்பவம்!

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், பாலமுருகனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பசுவந்தனை தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி அவரது மகன் மகாராஜன் ஆகிய இருவருக்கும், தற்போது கொலை செய்யப்பட்ட பாலமுருகன் மற்றும் அவரது தந்தை காளிப்பாண்டி ஆகிய இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த தகராறில், பாலமுருகனும் காளிப்பாண்டியும் சேர்ந்து கருப்பசாமியையும் அவரது மகன் மகாராஜனையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த இரட்டை கொலைச் சம்பவத்தில் சிறையில் இருந்த கடந்த வாரம் ஜாமினில் வெளியே வந்த பாலமுருகனை, உயிரிழந்த கருப்பசாமி - மகாராஜன் தரப்பினர் திட்டம் போட்டு கொலை செய்துள்ளனர்.

முன்விரோதம்.. பழிக்குப் பழி... கொலைக்கு கொலை என தென் மாவட்டங்களில் நடக்கும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

banner

Related Stories

Related Stories