தமிழ்நாடு

கிராம உதவியாளர் பணிக்கு ரூ.6.50 லட்சம் லஞ்சம் பெற்ற அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்: அதிர்ச்சி கிளப்பும் ஆடியோ!

கொடைக்கானல் மலைப் பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கிராம உதவியாளர் பணிக்கு ரூ.6.50 லட்சம் லஞ்சம் பெற்ற அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்: அதிர்ச்சி கிளப்பும் ஆடியோ!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இரண்டு பேர் செல்போனில் பேசிக்கொண்ட ஆடியோ பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்சி முடிவதற்குள் முடிந்த அளவுக்கு லஞ்சம் வாங்கி குவிக்க நினைக்கும் ஆளும் கட்சியினர், அவசர அவசரமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு அரசு வேலைகளை நிரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவில் வடகவுஞ்சி, வெள்ளகெவி, காமனூர், பாச்சலூர் உள்ளிட்ட நான்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியிடங்களுக்கும் ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இரண்டு பேர் செல்போனில் பேசிய ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் பேசிய நபர்கள், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மூலம் கிராம உதவியாளர் வேலைக்கு ஆறரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், அந்த லஞ்சப் பணத்தில் வட்டாசியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் பேசியுள்ளனர்.

மேலும், “தேர்தல் நேரம் என்பதால் ஒன்றிய செயலாளர் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. உடனே பணி நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டு வேலையில் சேர்ந்துவிடு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பணி நியமன ஆணை வழங்கினால், அது செல்லாமல் போய்விடும்” என ஒருவர் இன்னொருவருக்கு அறிவுரை கூறும்படியாகவும், அதற்கு மற்றொருவர், “தன்னிடம் பணி நியமன ஆணையின் நகல் இருக்கிறது. அதனை வைத்து வட்டாட்சியரிடம் பேசி பணியில் சேர வேண்டும்” எனவும் பேசியுள்ளார்.

“லஞ்சம் கொடுத்த அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது. உனக்கு மட்டும்தான் இன்னும் போஸ்டிங் போடவில்லை” என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட அந்த ஆடியோ கொடைக்கான மலைக்கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு தாலுகாவிலேயே லஞ்சமாக இத்தனை லட்சம் ரூபாய் கைமாறி உள்ளது எனில் தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணியிடங்கள் இதுபோலவே முறைகேடாக நிரப்பப்பட்டு இருக்கும். எனவே இதுபோன்று தேர்தலுக்கு முன்பு புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வெளிப்படையாகவே அரசுத்துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு யார் பதில் சொல்லப்போவது? கட்டிங் கமிஷன் கரப்ஷன் கலெக்‌ஷன் என மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்களா?

banner

Related Stories

Related Stories