தமிழ்நாடு

விருந்தினர் மாளிகை To அண்ணா பல்கலைக்கழகம்.. மோசடியில் சிக்கிய துணைப் பதிவாளர் : யார் இந்த பார்த்தசாரதி?

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பார்த்தசாரதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருந்தினர் மாளிகை To அண்ணா பல்கலைக்கழகம்.. மோசடியில் சிக்கிய துணைப் பதிவாளர் : யார் இந்த பார்த்தசாரதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் குரோம்பேட்டையில் செயல்படும் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில், (எம்.ஐ.டி) துணைப் பதிவாளராகப் பணியாற்றி வருபவர் பார்த்தசாரதி. இவரும் அவரது மகனான விஸ்வேஸ்வரும் இணைந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றி, பல கோடி ரூபாயைச் சுருட்டியுள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பான புகார்கள் மற்றும் குற்றச்சாட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸாருக்குச் சென்றுள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு விஸ்வேஸ்வரை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். இதில் மேலிடம் மற்றும் அரசு முக்கிய அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக துணை பதிவாளர் பார்த்தசாரதியை மட்டும் கைது செய்யமுடியாமல் போலிஸார் திணறி வந்தனர்.

இதனிடையே பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் விஸ்வேஸ்வர் உள்ளிட்ட 9 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில், இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆறுமுகம், ராஜூ, ராஜபாண்டி, விஸ்வேஸ்வர் ஆகிய 4 பேரைக் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களுடம் இருந்து லேப்டாப், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விருந்தினர் மாளிகை To அண்ணா பல்கலைக்கழகம்.. மோசடியில் சிக்கிய துணைப் பதிவாளர் : யார் இந்த பார்த்தசாரதி?

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, விஸ்வேஸ்வர் மற்றும் அவரது தந்தை பார்த்தசாரதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓ வேலை, மின்வாரியம், பொதுப்பணித்துறை, ஆசிரியர் நியமனம் என பல துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அதுமட்டுமல்லாமல், பணம் கொடுத்தவர்களை நம்பவைப்பதற்காக போலி பணி நியமன ஆர்டர்களை தயார் செய்தும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று இந்த முறைகேடுகளுக்கு மையப்புள்ளியாக செயல்பட்ட துணைப்பதிவாளர் பார்த்தசாரதியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருக்கும் நேரத்தில், பார்த்தசாரதி கைது செய்யப்பட்டிருப்பது ஆளும் அ.தி.மு.கவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, பார்த்தசாரதிக்கு ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விருந்தினர் மாளிகை To அண்ணா பல்கலைக்கழகம்.. மோசடியில் சிக்கிய துணைப் பதிவாளர் : யார் இந்த பார்த்தசாரதி?

யார் இந்தப் பார்த்தசாரதி? விருந்தினர் மாளிகையில் பணியாற்றிய பார்த்தசாரதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்தது எப்படி என பல்வேறு கேள்விகள் எழ, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் பார்த்தசாரதி. பின்னர் அங்கிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்த துணைவேந்தர் ஒருவர் மூலம், மாற்றுப்பணி மாறுதல் பெற்று, பி.ஆர்.ஓ-வாக அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ளார்.

அதன்பின்னர், அடுத்தடுத்து தொடர் பதவி உயர்வு மூலம், உதவிப் பதிவாளராகவும், இறுதியாக துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு என்பதால், பார்த்தசாரதியை யாரும் பகைத்துக்கொள்வதில்லை. நட்பு வட்டாரம் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

விருந்தினர் மாளிகை To அண்ணா பல்கலைக்கழகம்.. மோசடியில் சிக்கிய துணைப் பதிவாளர் : யார் இந்த பார்த்தசாரதி?

மேலும் பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் பார்த்தசாரதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளார். அவர் இருந்த காலத்தில்தான், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த புகாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட போதும் கூட, எம்.ஐ.டி-யில் உயர் பதவியில் இருந்த பார்த்தசாரதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; எடுக்கவும் முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பார்த்தசாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பார்த்தசாரதியின் இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து, விசாரணை முழுமையாக உண்மையாக நடைபெறும் பட்சத்தில், ஆளும் அ.தி.மு.கவின் முக்கிய புள்ளிகள் பலர் சிக்கக்கூடும் என பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories