தமிழ்நாடு

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

ஆட்சி முடியும் போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது. கழக அரசு அமைந்ததும், அனைவருக்குமான சமூகநீதியை நிச்சயம் வழங்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“அ.தி.மு.க.வை திரு. பழனிசாமியும், திரு. பன்னீர்செல்வமும் கரையானைப் போல அரித்து விட்டார்கள்; அதை வீழ்த்த இந்த ஸ்டாலின் அவதாரமெல்லாம் எடுக்கத் தேவையில்லை; ஸ்டாலினாக இருந்தாலே போதும்; அது வீழ்ந்துவிடும்”

“பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசுப் பணிகளில் பெற வேண்டிய உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசு பறித்த போது, அதைத் தடுக்க முடியாத பழனிசாமி, தேர்தல் நேரத்தில் சமூகநீதி நாடகத்தை நடத்தி வருகிறார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (28-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, கொட்டிவாக்கம் – ஓ.எம்.ஆர். சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற, சென்னை மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:

அன்புச்செல்வி என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வி அவர்கள் இங்கே ஒரு மனு கொடுத்திருக்கிறார். நான் அதைப் படித்துப் பார்த்தேன். நொச்சிக்குப்பம் பகுதியில் இருக்கும் மீன் கடைகளை வேறு இடத்திற்கு இந்த அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்று நெருக்கடி தருவதாக சொல்லியிருக்கிறார். மேலும் சுகாதார வசதிகளும் அவர்களுக்கு இந்த பகுதியில் சரியான முறையில் இல்லை. மேலும் முதலமைச்சராக இருந்த - மறைந்த ஜெயலலிதா அவர்கள், இங்கே கடைகள் கட்டித்தரப்படும். 50 கோடி ரூபாய் செலவில் 100 குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று வழக்கம் போல் சட்டமன்றத்தில் 110 விதியை பயன்படுத்தி அறிவித்தார்கள். ஆனால் அதை நிறைவேற்றிய மாதிரி தெரியவில்லை. பற்றாக்குறைக்கு இப்போது இருக்கும் கடைகளை காலி செய்யச் சொல்கிறார்கள்.

அறிவிப்பு என்றாலும் - வாக்குறுதி என்றாலும் அதை நிறைவேற்றும் வழக்கம் அ.தி.மு.க.விற்கு நிச்சயமாக இல்லை. ஆனால் தி.மு.க. அப்படி அல்ல, கலைஞரை பொறுத்தவரையில் சொன்னதைச் செய்வார் - செய்வதைத் தான் சொல்வார் என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். அ.தி.மு.க.வின் அறிவிப்புகளை பொறுத்தவரையில், அது தண்ணீரில் எழுதி வைத்த மாதிரி தான். ஆனால் தி.மு.க.வின் அறிவிப்புகள் கல்வெட்டில் செதுக்கியதுபோல இருக்கும். உங்களது கோரிக்கைகள் நிச்சயமாக கவனமாக பரிசீலித்து அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விரைவில் அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சகோதரி அன்புச்செல்வி மூலமாக அந்த வட்டாரத்து மக்களுக்கு நான் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

ஜெயா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

பேருந்து கட்டணம் உயர்த்தியது பற்றி இங்கு ஜெயா அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். பேருந்து கட்டணம் மட்டுமல்ல, பால் விலையும் உயர்ந்து விட்டது. விலைவாசியும் உயர்ந்து கொண்டே சென்று கொண்டிருக்கிறது. பேருந்து கட்டணத்தை பொறுத்தவரையில், கலைஞருடைய ஆட்சி இருந்தபோது அதிகாரிகள் எல்லாம் சொல்லுவார்கள், “நஷ்டத்தில் சென்று கொண்டு இருக்கிறது. பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்று பலமுறை கோரிக்கை வைப்பார்கள். ஆனால் கலைஞருடைய ஆட்சி காலத்தில் ஒருமுறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது இல்லை. போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. எவ்வளவு நஷ்டம் வந்தாலும் அதை அரசு ஏற்றுக் கொள்ளும் என்ற நிலையை கலைஞர் அவர்கள் ஏற்படுத்தினார்கள். நிச்சயமாக உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். குறைந்த கட்டண பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் அடுத்துவரும் நம்முடைய ஆட்சியில் உருவாக்குவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சரவணன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

உங்கள் மகனுடைய மருத்துவ செலவுக்கு உதவுவதுடன் - ஒரு நல்ல எதிர்காலத்தையும் நிச்சயம் உருவாக்க வேண்டும். உங்கள் பேச்சை கேட்கும் போது உள்ளபடியே எனக்கு மட்டுமல்ல, இங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் வேதனையாக இருக்கிறது. 3 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உங்கள் உதவித் தொகையை முறையாக வழங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர் - ஆயிரம் விளக்குப் பகுதிக் கழக நிர்வாகிகள் மூலமாக உரிய நடவடிக்கையை விரைவில் எடுப்போம். இதற்கு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு முன்பே உங்கள் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். கவலைப்படாதீர்கள்.

ரங்கநாதன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

ரங்கநாதன் சைதாப்பேட்டை தொகுதியைச் சார்ந்தவர். அவர் மனுவை முழுவதுமாக நான் படித்துப் பார்த்தேன். 12,000 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கும் கடந்த 5 வருடங்களாக அகவிலைப்படித் தொகையை நிலுவையில் வைத்து வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்று இங்கே தெளிவாக குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள். இது சம்பந்தமாக போராட்டங்களை தொடர்ந்து நடத்தியும் அது பயனற்றுப் போய்விட்டது. கேட்பார் இல்லை. நாங்கள் இருக்கிறோம். தி.மு.க. உங்கள் பக்கம் இருக்கும். கவலைப்படாதீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் உங்களுடைய கோரிக்கை மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். போக்குவரத்து துறை ஊழியர்களின் பணிப்பயன் முறையாக தி.மு.க. ஆட்சி வந்த பிறகு வழங்கப்படும் என்பதையும் நான் இங்கு ரங்கநாதன் அவர்கள் மூலமாக அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சித்ரா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலை உள்ள குடும்ப சூழ்நிலையில், 3 வருடங்களுக்கு முன்பு திருமணமான உங்களுடைய திருமண உதவித் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினருக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்கள் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மக்களுக்கு உதவுவதில் கூட தனது கட்சிக்காரர்களுக்கு நிதியை வழங்கிவிட்டு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த திருமண உதவித் திட்டம் என்பதை கலைஞர்தான் முதன் முதலில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பல திட்டங்களை உருவாக்கி தந்து சாதனை படைத்தார், தலைவர் கலைஞர் அவர்கள். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்திருக்கும் பெண்ணிற்கு திருமணம் என்றால் அதற்கு திருமண உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம், இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல மகளிர் சுய உதவிக் குழு என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கலைஞர் அவர்கள் 1989ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அது எல்லாம் இன்றைக்கு கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது. எனவே நிச்சயமாக உறுதியாக சொல்கிறேன் எப்படி கலைஞர் அவர்கள் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக திட்டங்களை உருவாக்கினாரோ, அவர் வழிநின்று இந்த கலைஞருடைய மகன் ஸ்டாலினும் நிச்சயமாக உறுதியாக பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பான் என்பதை உறுதியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

செல்வம் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

சின்னங்குடி குப்பம் மக்களுக்காக மட்டுமல்லாமல் உங்கள் குரலை நான் ஒட்டுமொத்த மீனவர்கள் சமுதாய நண்பர்களின் கோரிக்கையாக நான் கருதுகிறேன். மீன்பிடி தடைக் காலத்தில் 5,000 ரூபாய் நிவாரணம் அளிப்பது இந்த பொருளாதார நிலையில் நிச்சயமாக போதாது. இதை நாங்கள் பலமுறை சொல்லியும் இந்த ஆட்சி கேட்கவில்லை. முதலமைச்சர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்த துறை அமைச்சரும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏழை - எளிய மக்களை இந்த அரசு நோய்த்தொற்று காலத்தில் கூட, அதாவது கொரோனா காலத்தில் கூட கை விட்டதை நாம் பார்த்தோம். இந்த அரசா உங்களுடைய குறைகளை பூர்த்தி செய்யப் போகிறது? எனவே நான் உறுதி சொல்கிறேன், உங்களுக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் அத்தனை நடவடிக்கைகளையும் நம்முடைய அரசாங்கம் விரைவில் எடுக்கும். ஆட்சி மாற்றத்தோடு உங்களுடைய வாழ்க்கை வளமானதாக மாறும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்டி பேர்நெட்டோ என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

போரூரில் வடிகால் பிரச்சினை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னீர்கள். இதெல்லாம் உள்ளாட்சி சார்பில் - மாநகராட்சி சார்பில் செய்ய வேண்டிய வேலைகள். இதற்கு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும், திட்டங்கள் போட வேண்டும் என்று இல்லை. உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்தி இருந்தால் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க முடியும். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன்தான். அப்போது நல்லாட்சி செய்தவன் என்று பெயர் எடுத்தவன் நான். ஆனால் இப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் ஊழலாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார்.

எதில் கமிஷன் கிடைக்கும் - எதில் சதவிகிதம் கிடைக்கும் - எதில் ஊழல் செய்யலாம் என்பதில் தான் உள்ளாட்சித்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எல்லாத்துறையும் அப்படித்தான் இருக்கிறது. அதில் உள்ளாட்சித்துறை மிகவும் மோசம். இன்றைக்கு முதலமைச்சர் பழனிசாமி முதல் கடைசியில் இருக்கும் அமைச்சர் வரைபார்த்தீர்கள் என்றால் யார் நம்பர் 1 என்று கேட்டால் அந்த வேலுமணி – ஊழல்மணி தான். அந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் தான் நம்பர் 1.

கொரோனாவையும் பயன்படுத்தி கொள்ளையடித்தார்கள். பிளீச்சிங் பவுடரில் கொள்ளை அடித்தார்கள். துடைப்பத்தில் கொள்ளையடித்தார்கள். மாஸ்க் வாங்கியதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். கொரோனா காலத்திலும் கொள்ளை அடித்த ஒரு கொள்ளைக் கூட்டம் தான் இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட, வரவிருக்கும் தேர்தலை நாம் பயன்படுத்தப் போகிறோம். ஆட்சி மாற்றம் வந்த பிறகு உங்கள் பிரச்சினைகள் அத்தனையும் தீர்க்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

கோகுல் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

கோகுல் அவர்கள் தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் சிறு தொழில் சங்கத்தின் துணைத் தலைவராக இருப்பவர். எல்லா விவரங்களும் தெரிந்தவர் – புரிந்தவர். அதனால்தான் தெளிவாக அவர் அந்தப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். அவர் ஏற்கனவே இங்கே எங்களிடத்தில் கொடுத்திருக்கும் மனுவில் குறிப்பிட்டுக்காட்டியிருக்கிறார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருடைய வாழ்க்கையை ஜி.எஸ்.டி. கடினமாக்கிவிட்டது. மத்திய அரசு மாநிலத்தில் இருக்கும் உரிமைகளில் கை வைக்க தொடங்கியதன் முக்கிய காரணம் தான் இந்த ஜி.எஸ்.டி. வரி. ‘ஒரே நாடு - ஒரே வரி’ என்று சொல்லிக்கொண்டு தொழில் முனைவோருடைய வரி செலுத்தும் முறையை கடினமாக்குவதும், முறையாக வசூல் செய்யப்பட்டு வந்த மாநில வரி வருவாயைக் கூட மத்திய அரசிடம் கெஞ்சி கேட்கும் நிலைக்கு நம்மை தள்ளியதும் இந்த அரசின் சாதனையாக அமைந்திருக்கிறது.

தமிழகத்தின் பல தொழில் நகரங்களும் முடங்கி போனதற்குக் காரணமே இந்த ஜி.எஸ்.டி குளறுபடிகள் தான். இது தொடர்பாக உறுதியான ஒரு நடவடிக்கையை நிச்சயமாக தி.மு.க. அரசு எடுக்கும். இதை மத்திய அரசிடம் வலியுறுத்தி, மத்திய அரசுக்கு உரத்த குரல் கொடுத்து அதற்காக நிச்சயமாக போராடுவோம். அதில் எந்த அளவிற்கும் சந்தேகப்பட வேண்டாம். மாநில அரசு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிச்சயமாக வரவிருக்கும் நம்முடைய அரசு – தி.மு.க. அரசு நிச்சயமாக செய்யும் என்ற அந்த உறுதியை நம்முடைய சகோதரர்கள் கோகுல் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

மரியா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருமைச் சகோதரி மரியா அவர்கள் ஒரு தூய்மைப் பணியாளர். அவர் பேசியதும் தூய்மையாகத் தான் இருந்தது. பணியில் மட்டுமல்ல, பேச்சும் தூய்மையாக தான் இருந்தது. அதற்காக முதலில் அவருடைய பேச்சுக்கு - உணர்வுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். அவ்வளவு அருமையாக பேசினார். இத்தனை ஆண்டுகாலமாக சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து நம் மக்களின் சுகாதாரத்திற்காக உழைத்த உங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது. 300 சுகாதாரப் பணியாளர்களை முன்னறிவிப்பு இல்லாமல் இந்த அரசு பணிநீக்கம் செய்து அவர்களுடைய வாழ்க்கையை இன்றைக்கு ஒரு கேள்விக்குறி ஆக்கிவிட்டது. எல்லோருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதால், அந்த வேலையும் உறுதி செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. உங்கள் வேலை திரும்ப கிடைப்பதற்கான நடவடிக்கை, உடனடியாக தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உறுதியாக எடுக்கப்படும். 2 முறை நான் மேயராக இருந்தவன். இதோ இங்கு இருக்கும் சுப்பிரமணியன் அவர்களும் மேயராக இருந்தவர்தான். எனவே மாநகராட்சியை பொறுத்தவரையில் - தூய்மைப் பணியாளர்கள் பொறுத்தவரையில் என்ன கஷ்டம்? என்ன நிலைமை? என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவே நிச்சயமாக சொல்கிறேன், எப்படி கலைஞர் 5வது முறையாக முதலமைச்சராக இருந்தபோது - நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று, உள்ளாட்சியில் நல்லாட்சி என்று பெயரெடுத்தேனோ, அதேபோல நிச்சயமாக வரவிருக்கும் காலக்கட்டத்திலும் உள்ளாட்சி சிறப்பாக இருக்கும். அந்த நல்லாட்சியை உருவாக்குவோம். ஒட்டுமொத்த நல்லாட்சியை உருவாக்க போகிறோம். அதற்கு நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டு சகோதரி மரியா அவர்களே கவலைப்படாதீர்கள். பொறுத்தது பொறுத்தீர்கள். இன்னும் 2 மாதங்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். நல்ல காலம் வரும் என்பதை மகிழ்ச்சியோடு சகோதரி மரியா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவுக்கண் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:

அறிவுக்கண் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்தவர். அவர் ஒரு செவிலியர். மிகத் தெளிவாகச் சொன்னார். கஷ்டத்தை நஷ்டத்தை சொன்னார்கள். 35 வருடங்களாக அந்த பணியில் இருந்து தன்னுடைய பணியைச் செய்திருக்கிறார். இப்போது கே.எம்.சி. யில் வேலை செய்து கொண்டிருக்கிறார். கொரோனா காலத்தில் தங்களுடைய உயிரைப் பணயமாக வைத்து மக்களுடைய உயிரை காப்பாற்றிய உங்கள் சேவையை மதிக்காதது மட்டுமல்ல, உங்ககளுக்குச் சேர வேண்டிய ஊதியத்தை - ஊக்கத் தொகையைக் கூட வழங்காமல் இந்த அரசு தவிக்க விட்டு கொண்டிருக்கிறது. மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவிற்கு இல்லாமல் மருத்துவர்களும் தவித்திருக்கிறார்கள். செவிலியர்களும் தவித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மருத்துவ பணியாளர்கள் தகுந்த முறையில் கௌரவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளும் நிச்சயமாக உறுதி செய்வார்கள். உங்கள் ஊதியத்தையும் - ஊக்கத் தொகையையும் விரைவில் வழங்குவதற்கான ஏற்பாட்டை நம் ஆட்சி அமைந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்போம் என்பதை சகோதரி அறிவுக்கண் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் இவ்வாறு பேசினார்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் கழகத் தலைவர் அவர்கள் நிறைவாக ஆற்றிய உரை விவரம்:

ஊரும் உள்ளமும் தூய்மையானால், உன் பேரும் பெருமையும் வாய்மையுறும் - என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள். எழுதியபடி வாழ்ந்தார்கள். அப்படித்தான் எங்களையும் வாழும் படி கற்பித்தார்கள்.

சென்னை மாநகரத்தின் மேயராக நான் ஒரு முறையல்ல, இரண்டு முறை இருந்தவன். அமைச்சர் பொறுப்பும் துணை முதலமைச்சர் பொறுப்பும் அதன்பிறகு வந்தவை, முதலில் கிடைத்த பொறுப்பு சென்னை மாநகர மேயர்தான்.

சென்னை மாநகராட்சியின் மேயராக 44வது வயதில் நான் வந்தேன். ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று பிற்காலத்தில் என்னை பாராட்டினார் தலைவர் கலைஞர். அப்படி உழைக்க எனக்கு கற்றுக் கொடுத்தது சென்னையின் மழை தான். முதன்முதலாக நான் மேயரானபோது தொடர்ந்து சென்னையில் அடைமழை பெய்தது. முறையான வடிகால் வசதிகள் இல்லாத நிலையில் தண்ணீரில் மிதந்தது தலைநகர். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களுக்கு தினமும் சென்று விடுவேன். உடனடியாகச் செய்யவேண்டிய காரியங்களை அதிகாரிகள் மூலமாக முடுக்கி விட்டேன். பின்னர், தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வடிகால்களை அமைத்தோம்.

நான் மேயராக பதவி ஏற்பதற்கு முன்புவரை சுமார் 663 கிலோ மீட்டர் நீளத்துக்கு வடிகால்வாய்கள் இருந்தது. எனது காலத்தில் சுமார் 135 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக வடிகால்களை அமைத்தோம். சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒன்பது பாலங்களைக் கட்டியது எனது சாதனை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக பாலத்தைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, அதற்கு குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட தொகைக்கும் குறைவாக கட்டிக் கொடுத்துக் காட்டியவன் நான்.

மாநகராட்சி பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தினோம். சேர்க்கை விகிதம், வெற்றி விகிதம் அனைத்தும் உயர்ந்தது. மாநகராட்சி பள்ளிகள் கணினி வசதி கொண்டதாக மாறியது. சென்னை சிங்காரச் சென்னையாக மாறுவதற்கான அடித்தளப் பணிகள் அனைத்தையும் செய்து கொடுத்தோம்.

புதிய சாலைகளை அமைத்தோம். சாலைகளை விரிவாக்கினோம். நடைபாதைகளை அமைத்தோம். பேருந்து நிழற்குடைகள் அமைத்தோம். வாகனம் நிறுத்தும் இடங்கள் உருவாக்கினோம். மின் தூக்கி நடைபாலங்கள் அமைத்தோம். வழிகாட்டி பலகைகளை வைத்தோம். சத்துணவு கூடங்கள் கட்டினோம். பெருங்குடியில் திடக்கழிவு மேலாண்மையை உருவாக்கினோம். மழைநீர் கால்வாய்களை உருவாக்கிக் கொடுத்தோம். பூங்காக்கள் அமைத்தோம். மாநகராட்சி கணினி மயம் ஆனது. 24 மணி நேரத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் தருவதை உறுதிப்படுத்தினோம். மாநகராட்சி ஊழியர்கள் பணிநிரந்தரம் ஆக்கப்பட்டார்கள்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

மாநகராட்சியை நோக்கி மக்கள் வரும் நிலையை மாற்றி மக்களை நோக்கி மாநகராட்சி சென்றது. அதுதான் திமுக காலத்தில் சென்னையின் நிலைமையாக இருந்தது. சென்னையை வலம் வாருங்கள். நீங்கள் பார்க்கும் அனைத்தும் கழகத்தால் உருவாக்கப்பட்டவை தான்!

* அண்ணா சாலை அண்ணா மேம்பாலம்

* கத்திப்பாரா மேம்பாலம்

* கோயம்பேடு மேம்பாலம்

* நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

* செம்மொழிப் பூங்கா

* டைடல் பார்க்

* தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு இன்று பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை

* மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம்

* மெட்ரோ ரயில்

* கோயம்பேடு காய்கறி அங்காடி

* கோயம்பேடு பேருந்து நிலையம்

* நாமக்கல் கவிஞர் மாளிகை

* பாடி மேம்பாலம்

* மீனம்பாக்கம் மேம்பாலம்

* மூலக்கடை மேம்பாலம்

* மேற்கு அண்ணாநகர் மேம்பாலம்

* வியாசர்பாடி மேம்பாலம்

* தொல்காப்பிய பூங்கா

* மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

* தென்சென்னை முழுக்க 1400 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் திட்டங்கள்

* அண்ணா நூற்றாண்டு நூலகம்

* ஓ.எம்.ஆர் சாலையை ஐ.டி. காரிடாராக மாற்றியதும் தி.மு.க.தான்.

- இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் சென்னையின் தேவையை தீர்த்து வைத்தவர்கள் நாம்!

சென்னை மாநகர மக்களுக்கு மிகப்பெரியவசதியாகத் திட்டமிடப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம். மெட்ரோ ரயில் திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 2006ம் ஆண்டில் திட்டமிட்டார்கள். ஜப்பான் சென்று அதற்கான நிதியை பெற்று வந்தவன் நான். இன்றைக்கு மெட்ரோ ரயிலில் பல்லாயிரக்கணக்கானோர் பயணிக்கிறார்கள் என்றால் அதற்கு கலைஞரும் நானும் திமுகவும் தான் காரணம் என்பதை சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள்.

சென்னை மாநகரின் மேயராக நானும் என்னை அடுத்து வந்த மா.சுப்பிரமணியம் அவர்களும் செய்த பணிகளால் தான் இந்தளவு சென்னை வளர்ந்தது. அதேபோல் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் நான் இருந்தபோது சென்னைக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அதிகம்.

பெரம்பூர் பாலம் திறப்புவிழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ''மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் மட்டுமல்ல எனக்கு துணையாக இருக்கிற அமைச்சர்" என்று பாராட்டினார்கள். ''நான் என்ன கருதுகிறேன், என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு அந்த நினைப்பை நிகழ்த்திக் காட்டும் திறமை படைத்தவர் ஸ்டாலின்" என்றும் முதல்வர் கலைஞர் அவர்கள் பாராட்டினார்கள்.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

அதேபோல் தான் மா.சுப்பிரமணியம் அவர்கள் சென்னை மாநகரருக்கு ஆற்றி வரும் பணிகளைப் பார்த்தும் பாராட்டினார் முதலமைச்சர் கலைஞர். “இவரா மேயர் என்று நான் முதலில் நினைத்தேன். அது தவறு என்று என்னைத் தோற்கடித்துக் காட்டி இருக்கிறார் மா.சுப்பிரமணியம்" என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பேசினார்கள்.

என்னையோ, மா.சுப்பிரமணியத்தையோ முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பாராட்டினார்கள் என்றால் அது தனிப்பட்ட எங்களுக்கு மட்டும் கிடைத்த பாராட்டு அல்ல. சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபட்டதால் கிடைத்த பாராட்டு அது! ஆனால் இன்று சென்னையை குப்பை நகராக மாற்றிவிட்டார்கள். சிங்கார சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிவிட்டார்கள்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 200 வார்டுகளிலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான் காட்சி தருகிறது. குப்பை மேடுகளில் மக்கள் நடந்து போகிறார்கள். குப்பை தொட்டிகள் இல்லை. இருந்தாலும் அவை நிரம்பி வழிகிறது. எடுப்பது இல்லை. நிரம்பி வழிந்து சாலைகள் குப்பை போடும் இடங்களாக மாறிவிட்டது. எப்போது டெங்கு வருமோ, வைரஸ் பரவுமோ என்ற அச்சம் எல்லா வார்டுகளிலும் இருக்கிறது.

சில மண்டலங்களுக்கு மட்டும் குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு விட்டுள்ளார்கள். அந்தப் பணிக்காக குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே டெண்டர் விட்டதை போல காட்டி விதிமுறைகளை திருத்தி இருக்கிறார்கள். குப்பைக்கு வரி போட்ட குப்பை அரசுதான் இது. நான் கண்டித்த பிறகு தான் அதை ரத்து செய்தார்கள்.

கொரோனா காலத்து கொள்ளைகளில் சென்னை மாநகராட்சி முதலிடம் பிடித்தது என்ற அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடியது. நோய்க் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நோய்க் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படவில்லை. போலி பில்களை போட்டு பணத்தை எடுத்துக் கொண்டார்கள். மாஸ்க் - பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை அநியாய விலைக்கு வாங்கி கொள்ளை அடித்துள்ளார்கள். மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உணவு கொடுத்தோம் என்று சொல்லி பல கோடி சுருட்டி உள்ளார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு முன்னால் தகரம் அடித்தார்கள் தெரியுமல்லவா? அந்த தகரத்தில் துட்டு அடித்தது சென்னை மாநகராட்சி.

ஒரு வீட்டுக்கு முன்னால் ஐந்து தகரம் அடிக்கிறார்கள். ஒரு தகரத்துக்கு வாடகை 8, 500 ரூபாய் என்று போட்டுள்ளார்கள். ஆட்டோவில் மைக் வைத்து சொல்வதில் ஊழல். சிறு வியாபாரிகளுக்கு மாதம் தோறும் பணம் கொடுத்ததாகச் சொல்லி கணக்கு காட்டி இருக்கிறார்கள். இப்படி கொரோனா காலத்து அறுவடைகளே சென்னை மாநகராட்சியில் அதிகமாக நடந்தன. இந்த மோசடிகளுக்கு பகல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

''ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது" என்று பழனிசாமி பேசி இருக்கிறார். அதிமுகவை வீழ்த்துவதற்கு, இந்த ஸ்டாலின் எந்த அவதாரத்தையும் எடுக்கத் தேவையில்லை. ஸ்டாலின், ஸ்டாலினாகவே இருந்தாலே அதிமுக வீழ்ந்துவிடும். அதிமுகவை கரையானைப் போல பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அரித்து பலவீனம் ஆக்கிவிட்டார்கள். எனவே இதனை வீழ்த்துவதற்கு இன்னொரு அவதாரம் தேவையில்லை.

“எடப்பாடி அரசின் அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது” : மு.க.ஸ்டாலின் விளாசல்!

சசிகலா சிறையை விட்டு வெளியில் வந்துவிட்டார் என்றதும் பயந்து போய் அதிமுக தலைமைக் கழகத்தை பூட்டியவர் பழனிசாமி. ஜெயலலிதாவின் நினைவிடத்தை பூட்டியவர் பழனிசாமி. ஜெயலலிதா பிறந்த அன்று கூட அதனை பழனிசாமியால் திறக்க முடியவில்லை. அந்தளவுக்கு பயம் பீடித்துக் கிடக்கும் பழனிசாமி விரைவில் வீழ்வார். மக்கள் அதைச் செய்வார்கள்.

“ஸ்டாலின் ஆட்சியில் இல்லை, அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்” என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அப்படியானால் நான் சொல்வது அனைத்தையும் எதற்காக பழனிசாமி அறிவித்துக் கொண்டு இருக்கிறார்?

கூட்டுறவுக் கடன் ரத்து என்று நான் சொன்னேன். செய்தார் பழனிசாமி. நகைக்கடன் ரத்து என்று நான் சொன்னேன். செய்தார் பழனிசாமி. செய்யக் கூடியதை தான் சொல்வேன். நான் சொன்னதும் பழனிசாமி செய்து வைப்பார். நான் சொல்வதற்கு முன்னால் அவருக்கு அது தோணாது. ஏனென்றால் அவருக்கு நோக்கம் என்பது எப்போதும் கமிஷன், கலெக்‌ஷன் தான். அதனால் தான் மக்கள் நன்மைக்குரிய எதுவும் ஞாபகத்துக்கு வராது. தேர்தல் நெருங்கி வருவதால் இவை அனைத்தையும் தனக்கு தோன்றியதைப் போல செய்கிறார் பழனிசாமி.

இன்றைக்கு அரசியல் லாபங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல்வேறு பகட்டு வாக்குறுதிகளை பழனிசாமி செய்து வருகிறார். பசப்பு காரியங்களை செய்து வருகிறார். முதலமைச்சர் என்பதை மறந்து தான் தோன்றித்தனமான அறிவிப்புகளை செய்து வருகிறார். அவர் செய்யும் அறிவிப்புகள், திட்டங்கள் பற்றி அவருக்கு உள்ளார்ந்த ஈடுபாடு இல்லை. அவருக்கு எந்தக் காலத்திலும் இருந்த தில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் மத்திய அரசுப் பணிகளில் பெற வேண்டிய அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது. அதற்கு எதிராக ஒரே ஒரு அறிக்கை கூட விடாதவர் தான் இந்த பழனிசாமி. மத்திய அரசுப் பணி என்பதே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்த சதியை தடுக்க முடியாதவர் பழனிசாமி. ஆனால் இன்றைக்கு தேர்தல் நேரத்தில் சமூகநீதி நாடகத்தை பழனிசாமி போட்டு வருகிறார். விவசாயி என்று போட்ட வேஷம் தேர்தலுக்காக! சமூகநீதி என்று போடும் வேஷமும் தேர்தலுக்காக என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். ஆட்சி முடியும் போது அரைவேக்காடு அறிவிப்புகளின் மூலமாக சமூகநீதியைக் காக்க முடியாது. கழக அரசு அமைந்ததும், அனைவருக்குமான சமூகநீதியை நிச்சயம் வழங்கும்!

ஏப்ரல் 6 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. மே 2 ஆம் நாள் வாக்குகள் எண்ணிக்கை. நாம் தான் வெற்றி பெறுவோம். அப்படி ஆட்சி அமைந்ததும் உங்கள் கவலைகளை - உங்களது கோரிக்கைகளை- உங்களது எதிர்பார்ப்புகளை - பூர்த்தி செய்யும் ஆட்சியாக அமையும். உங்கள் கோரிக்கைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.

தமிழக மக்கள் அளித்துள்ள மனுக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனித்துறை உருவாக்கப்படும். அந்தத்துறை மனுக்களைப் பிரித்து, தொகுதி வாரியாக, மாவட்ட வாரியாக, கிராம வாரியாக முகாம்களை அமைத்து குறைகளை விசாரித்துத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியினை அளிக்கிறேன். அதிமுக அரசு செய்யத் தவறிய கடமையை தி.மு.க அரசு நிச்சயமாக செய்யும்!

மு.க.ஸ்டாலின் ஆகிய நான் வீட்டுக்கு விளக்காவேன்! நாட்டுக்கு தொண்டனாவேன்! மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்! நன்றி! வணக்கம்!

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

banner

Related Stories

Related Stories