தமிழ்நாடு

பேச்சுவார்த்தை நடத்தாமல் போக்குவரத்து ஊழியர்களை வஞ்சித்த அதிமுக அரசு : காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும்!

“அரசின் மெத்தனப் போக்கால் ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஆக்ரோஷத்துடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.”

பேச்சுவார்த்தை நடத்தாமல் போக்குவரத்து ஊழியர்களை வஞ்சித்த அதிமுக அரசு : காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று முதல் நடைபெறும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

அப்போதும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வராத அரசு போக்குவரத்து கழகம், வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் பேருந்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது. தொ.மு.ச. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்புகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி தீர்வு காண வேண்டும்; ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியையும், ஓய்வூதிய கால பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும்; தொழிலாளர்களுக்குரிய 8,000 கோடி ரூபாய் பணத்தை எடுத்து செலவு செய்த தமிழக அரசு, அந்த தொகையை மீண்டும் அவரவர் கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் எம்.பி., கூறுகையில், “அரசின் மெத்தனப் போக்கால் ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஆக்ரோஷத்துடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 95 சதவீத பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

“போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மாறாக போராட்டத்தை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும்” என சி.ஐ.டி.யு மாநில தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சி.பி.ஐ.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, தமிழக அரசு போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வெட்டு, துறை ரீதியான நடவடிக்கை என கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்நடவடிக்கை போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்கே வழி வகுக்குமே தவிர, சுமூகத் தீர்வு காண்பதற்கு உதவாது. எனவே, ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்க தலைவர்களையும் உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “அரசு ஊழியர், போக்குவரத்து ஊழியர் போன்றோருக்கு சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய உயர்வு வழங்கப்படாமல், சிரமத்தை சந்திக்கின்றனர். ஆட்சி மாற்றம் வந்ததும், அவர்களது கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories