தமிழ்நாடு

பெண் குழந்தையாகப் பிறப்பது குற்றமா? : உசிலம்பட்டியில் இன்றும் தொடரும் கொடூரம்!

உசிலம்பட்டியில் பெண்சிசுவை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தையாகப் பிறப்பது குற்றமா? : உசிலம்பட்டியில் இன்றும் தொடரும் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சின்னச்சாமி - சிவப்பிரியங்கா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 10ம் தேதி மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் அடுத்த நாளே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். அப்போது, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும் குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்ததை தொடர்ந்து போலிஸாருக்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் குழந்தையின் தந்தையிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

பெண் குழந்தையாகப் பிறப்பது குற்றமா? : உசிலம்பட்டியில் இன்றும் தொடரும் கொடூரம்!

இந்த விசாரணையில், குழந்தையின் தந்தை சின்னசாமி சொன்னதைக் கேட்டு போலிஸாரே அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்ததால் சின்னசாமியின் தாயார் நாகம்மாள் ஆத்திரமடைந்துள்ளார். மேலும் வீட்டிற்கு எடுத்து வராமல் “குழந்தையை எங்கயாவது தூக்கி போட்டுட்டு வாங்க” என மகனிடம் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிவபிரியங்கா, மூன்றாவதாகப் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, சின்னசாமியும், நாகம்மாளும் சேர்ந்து குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததாக போலிஸாரிடம் சின்னசாமி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நாகம்மாளை கைது செய்தனர். மேலும் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் சிசுக் கொலை செய்யும் கொடூரம் மீண்டும் தலைதூக்கியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories