தமிழ்நாடு

முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பகீர் சம்பவம்!

முன்விரோதத்தினால் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முன்விரோதத்தினால் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கொலை முயற்சி செய்யப்பட்ட நிலையில், தற்போது மர்ம கும்பல் அவரை பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட கௌதமபேட்டை பகுதியைச் சேர்ந்த சிற்றரசன் என்பவரது மகன் 28 வயதான வானவராயன். இவர் திருப்பத்தூர் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்குத் திருமணமாகியுள்ளது. வானவராயன் கௌதமபேட்டை பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார் வானவராயன்.

வானவராயனை கொலை செய்த அந்தக் கும்பல் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றுள்ளது. அப்போது தெற்கு முத்தப்பா தெருவை கடக்கும்போது, எதிரே வந்த ஒரு ஆட்டோவின் மீது மோதியுள்ளனர். அப்பொழுது அந்த ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய ஆட்டோ சேதமடைந்ததை சரி செய்து கொடுக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கொலை செய்துவிட்டு தப்பித்துச் செல்லும் அவசரத்தில் இருந்த கும்பல் என்ன செய்வதென்று தெரியாமல், “தங்களிடம் பணம் இல்லை. ஏ.டி.எம்மிற்கு சென்றுதான் எடுத்துக்கொடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர். அவர்களை நம்பாத ஆட்டோ ஓட்டுனர் “காரை இங்கேயே நிறுத்திவிட்டு, என்னுடைய ஆட்டோவிலேயே வந்து ஏ.டி.எம்மில் பணத்தை எடுத்துக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார். அங்கிருந்து தப்பிச் சென்றால் போதும் என்ற மனநிலையில் இருந்த அந்த மர்ம கும்பல், வேறு வழியில்லாமல் தங்களுடைய காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றதாக சொல்லப்படுகின்றது.

இதற்கிடையே கொலைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருப்பத்தூர் நகர காவல்துறையினர் வானவராயனின் சடலத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலிஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வானவராயன் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த வானவராயன் சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். பைனாஸ் தொழில் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வானவராயன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம், பழிக்குப் பழி என தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் கொலைச் சம்பவங்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories