தமிழ்நாடு

“தமிழ் கற்றுக்கொடுக்க கோரிக்கை வைத்தால் ஊழல் அமைச்சருக்கு ஏன் கோபம் வருகிறது?” - T.K.S.இளங்கோவன் கண்டனம்!

“ஊழலில் இருந்து தப்பிக்க தி.மு.க எம்.பி.க்குள் மீது ஆதாரமற்ற பழி போடுவதா?” என அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம். பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் கற்றுக்கொடுக்க கோரிக்கை வைத்தால் ஊழல் அமைச்சருக்கு ஏன் கோபம் வருகிறது?” - T.K.S.இளங்கோவன் கண்டனம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“தமிழ் கற்றுக் கொடுக்க கோரிக்கை வைத்தால் அடிமை ஆட்சியின் ஊழல் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு ஏன் கோபம் வருகிறது?” என தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.கழகத்தை விமர்சிப்பதாக எண்ணிக் கொண்டு உளறல் அமைச்சர்களில் ஒருவரான கடம்பூர் ராஜூ பல தவறான தகவல்களை தமது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், காப்பி குடித்தார் என்றெல்லாம் பொய்களை அள்ளிவிட்ட கூட்டம் இன்று எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவர் இறந்து விட்டார் என்று கூறி தி.மு.க வாக்கு கேட்டது என்று புளுகியிருக்கிறார். எம். ஜி. ஆர் அந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டார் என்று சொல்லி எப்படி வாக்குக் கேட்க முடியும்? பொய்யைச் சொல்வதில்கூட ஒரு பொருத்தம் வேண்டாமா?

தலைவர் கலைஞர் அவர்களுக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ருக்கும் ஏறத்தாழ 1940களின் இறுதியில் தொடங்கி 1972 வரை நட்பு நீடித்தது. முத்தமிழறிஞர் கலைஞர் கதை வசனத்தில், தயாரிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் என் பெரியப்பா என்று எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது எப்படி தவறாகும். எம்.ஜி.ஆரை சுவரொட்டியில் பார்த்தவரெல்லாம் எம்.ஜி.ஆருக்கு உரிமை கொண்டாடும்போது எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் உரிமை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்று தி.மு.க மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது கடம்பூர் ராஜூவுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டது. ஆண்டைகளைக் குறை கூறினால் அடிமைகளுக்குக் கோபம் வரத்தானே செய்யும்.

தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்மொழிப் பாடம் கற்றுத்தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தி.மு.க அழுத்தம் கொடுத்தால் கடம்பூர் ராஜூவுக்கு ஏன் கோபம் வருகிறது? அந்த அளவுக்கா இந்த அடிமைக்குத் தமிழ்மொழி மேல் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.கழகத்தின் சார்பில் 24 பேர் மக்களவையிலும் 7 பேர் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மக்களவையில் 14 பேரும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

தி.மு.கவின் 31 உறுப்பினர்கள் 310 பேருக்குத்தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரை செய்ய முடியும். 45,000 பேர் படிக்கும் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் தமிழ் இடம்பெற வேண்டுமென்று தி.மு.க கோரிக்கை வைத்தால் கடம்பூர் ராஜூ 310 பேர் பற்றிப் பேசி தனது அவசர புத்தியையும் அறியாமையையும் வெளிப்படுத்திக் கொள்கிறார். பணம் வாங்குவது என்பது அ.தி.மு.கவின் ஒரே கொள்கை. அவர் கட்சி எம்.பி.க்களுக்கு பழக்கம். எந்தத் திட்டம் அறிவித்தாலும் அந்தத் திட்டத்தில் எவ்வளவு கமிஷன் வரும் என்று கணக்குப் போட்டே திட்டத்தை அ.தி.மு.க அமைச்சர்கள் அறிவிப்பார்கள்.

தமிழகத்தையே சுரண்டிக் கொள்ளையடித்த கடம்பூர் ராஜூக்கள் கூட்டத்துக்கு தி.மு.கவைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

தமிழக மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர வேண்டும் என்று சொன்னால் அதனை எதிர்க்கும் கடம்பூர் ராஜூக்கள் கூட்டத்தை தமிழக மக்கள் கவனித்துக் கொள்வார்கள்.

அடிமைகளே, நாவடக்கம் தேவை. நீங்கள் அடித்த கொள்ளைகள் குறித்த விவரம் மத்திய அரசுக்குத் தெரியும். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நீங்கள் வேண்டுமானால் பா.ஜ.கவின் காலைப் பிடித்து பிழைக்க நினைக்கலாம். ஆனால் தி.மு.க தமிழையும் தமிழரையும் காப்பாற்றுவதற்காக உருவான இயக்கம்.

ஜெயலலிதா இறந்தபின் தலை இழந்த முண்டங்களாக நீங்கள் துள்ளிக் குதிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories