தமிழ்நாடு

“மக்களாட்சிக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை கைவிடுக” - மோடி அரசுக்கு வைகோ கோரிக்கை!

அடக்குமுறைச் சட்டங்கள், அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வாழ்நாள் முழுமையும் முடக்கும் தன்மை கொண்டவை.

“மக்களாட்சிக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை கைவிடுக” - மோடி அரசுக்கு வைகோ கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அடக்குமுறைச் சட்டங்களைக் கைவிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுங்கள் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act -UAPA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A-(Sedition) ஆகியவை, மக்களாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானவை. இத்தகைய அடக்குமுறைச் சட்டங்கள், அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை வாழ்நாள் முழுமையும் முடக்கும் தன்மை கொண்டவை. இவற்றைப் பயன்படுத்தி, பாரதிய ஜனதா கட்சி அரசு, மக்களுக்காகப் போராடுகின்றவர்களையும், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் கைது செய்யும் போக்கு அண்மைக் காலத்தில் வளர்ந்து வருகின்றது. இது, கொடுங்கோன்மைப் போக்கு ஆகும்.

2014 முதல் 2018 வரை ஊபா சட்டத்தின் கீழ், இந்தியாவில் 4,878 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என, தேசிய குற்ற இயல் ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரம் சுட்டிக் காட்டுகின்றது. பீமா கொரேகான் வழக்கில், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (PUCL) தேசியச் செயலாளர்களுள் ஒருவரான சுதா பரத்வாஜ் உள்ளிட்ட 16 ஆளுமைகள் ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2019 இல் மட்டும் ஊபா சட்டத்தின் கீழ் 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூருக்கு அடுத்து, இது அகில இந்திய அளவில் இரண்டாவது அதிக இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், தலைமைக்குழு உறுப்பினர் கோ. சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் 06.02.2021 அன்று ஊபாச் சட்டத்தின் கீழ், சேலம் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2019 நவம்பர் 15 அன்று ஓர் இறப்பு அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றதற்காக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல் துறை தெரிவிக்கின்றது.

அவர்களைத் தவிர, ‘சிறைவாசிகள் விடுதலைக் குழு’ பொறுப்பாளர் விவேக் எனும் விவேகானந்தன் அவர்கள் மீது, இதே அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக, (வழக்கு எண் - 14/ 2020) இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்குக் கீழ்படிய மறுத்தல்), 120 B (குற்றவியல் சதித் திட்டத்தின் தண்டனை), 121 (இந்திய அரசுக்கு எதிராகப் போரிடுவது உள்ளிட்டவை), 121A (பிரிவு 121 கீழ் குற்றம் புரிய சதி) மற்றும் UAPA பிரிவுகள் 10 (தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பவருக்கு தண்டனை உள்ளிட்டவை), 13 (சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனை), 15 (பயங்கரவாத நடவடிக்கை), 18 (சதித்திட்டம் தீட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு தண்டனை) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர் ஏற்கனவே, ஒரு முகநூல் பதிவுக்காகவும், ஆங்கில நாளிதழில் (The Hindustan Times) வந்த ஒரு கட்டுரையைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதற்காகவும் கடந்த டிசம்பரில் ஊபாவில் கைது செய்யப்பட்டு, மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள், அந்தச் சட்டத்தையே கேலிக்கூத்து ஆக்குகின்றது. இறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடந்து ஓராண்டிற்குப் பிறகு, தற்பொழுது மூன்று செயற்பாட்டாளர்களைத் திடீரெனக் கைது செய்து இருப்பது எதிர்க்கட்சியினரை மிரட்டும் நடவடிக்கை ஆகும். மிசா, தடா, பொடா என மூன்று அடக்குமுறைச் சட்டங்களையும் எதிர்கொண்டு இருக்கின்றேன். ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கின்றேன்.

எனவே, தேவையற்ற, மக்கள் ஆட்சிக் கோட்பாட்டுக்கு எதிரான, இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிட்டு, பாலன், கோ.சீனிவாசன், செல்வராஜ் மற்றும் விவேக் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா மற்றும் 124A வழக்குகளை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories