தமிழ்நாடு

”2 ஜி.பி டேட்டா எங்களுக்கு கிடைக்கவில்லை” - வாக்குக்காக எடப்பாடி ஏமாற்றுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!

கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க 2 ஜி.பி இலவச டேட்டா வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒரு மாதமாகியும், மாணவர்களுக்கு டேட்டா கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

”2 ஜி.பி டேட்டா எங்களுக்கு கிடைக்கவில்லை” - வாக்குக்காக எடப்பாடி ஏமாற்றுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தல் நேரப் பரபரப்பில், தன் ஆட்சியின் கருப்புக் கறைகளை எல்லாம் மூடி மறைக்க, மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய இயலாது என நீதிமன்றத்தில் வாதாடிய அதே எடப்பாடி அரசு, வாக்குகளை கவரும் நோக்கில் 12,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் மீது முடிவெடுக்க, ஆளுநரை வலியுறுத்துவதாக மற்றொரு நாடகத்தையும் நடத்திக் காட்டினார். ஆனால், ஆளுநரிடம் மனு கொடுக்கும் முன்பே ஆளுநர், “ குடியரசு தலைவருக்கே முடிவெடுக்கும் அதிகாரம்” என விடுதலை கோரிக்கையை நிராகரித்தது தற்போது அம்பலமாகியுள்ளது. மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வாக்கு சேகரிக்கலாம் என்பதிலேயே எடப்பாடி பழனிசாமியின் சிந்தனை இருக்கிறது.

அவ்வகையில் மற்றொரு ஏமாற்று வேலை அம்பலமாகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக தினமும் 2GB டேட்டா வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். எல்காட் நிறுவனம் மூலம் டேட்டா கார்டுகள் விநியோகிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கொடுப்போம் என்றார்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் பாடம் நடத்த அனுமதித்தது எடப்பாடி அரசு. ஸ்மார்ட்போன், லேப்டாப், இணைய வசதி இல்லாத ஏழை எளிய மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்கான சலுகைகளையோ, சிறப்பு ஏற்பாடுகளையோ செய்யாத பழனிசாமி, தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இதுவரை தங்களுக்கு இலவச டேட்டா கிடைக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

”2 ஜி.பி டேட்டா எங்களுக்கு கிடைக்கவில்லை” - வாக்குக்காக எடப்பாடி ஏமாற்றுவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு!

ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினீயரிங் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதமாகியும் இன்னும் மாணவர்கள் டேட்டா கார்டுகளை பெறவில்லை என்றே தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் முன்னணி அரசு பொறியியல் கல்வி நிலையமான அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இதே நிலை தான். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கும் போது “முதல்வர் இலவச டேட்டா அறிவித்ததை தொடர்ந்து அந்த டேட்டாவை பெற எங்களது கல்லூரியில் தொடர்பு கொண்டு கேட்டோம். ஆனால் எங்களது கல்லூரி நிர்வாகம் அரசாங்கம் அறிவித்தது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றனர். மேலும், அந்த 2ஜிபி டேட்டா அனைத்து மாணவர்களுக்கும் கிடையாது, கல்லூரியில் உதவித் தொகை பெரும் மாணவர்களுக்கு மட்டுமே என்றும் கூறினர்.

உதவித் தொகை பெறும் மாணவர்களுக்குமே, இதுவரை 2ஜிபி டேட்டா கிடைக்கவில்லை. எங்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்வு எழுதும் போதும் குறைந்தது 7௦௦ எம்.பி தேவைப்படுகிறது. எங்களுக்கு அந்த 2ஜிபி டேட்டா இருந்தால் உதவியாக இருக்கும். அரசாங்கம் தேர்தல் காரணமாக இது போன்ற திட்டங்களை அறிமுகபடுத்துகிறார்களே தவிர செயல்படுத்துவதில்லை.” என்று வேதனையுடன் கூறினர்.

ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க இணையம் அவசியம். பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களிலும், போதிய வசதியும் இல்லாததால், அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடிவதில்லை. மாணவர்களின் கல்வியோடு, தேர்தல் கேம் விளையாடாமல், கல்வி பயிலும் மாணவர்களின் நலனை மனதில் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

2ஜிபி டேட்டா என பிதற்றிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் கூடிய விரைவில் டாட்டா காட்ட உள்ளனர் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories