தமிழ்நாடு

“அஞ்சலக கணக்கர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட சதி?

அஞ்சலக கணக்கர் தேர்வில், தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“அஞ்சலக கணக்கர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட சதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் அஞ்சலக கணக்கர் தேர்வில் தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்த நிலையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பா.ஜ.க அரசின் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கை கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க எம்.பி., செந்தில்குமார், “அஞ்சலக கணக்கர் தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தனது முந்தைய நிலைப்பாட்டை பின்வாங்கிக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் கூறுகையில், “அஞ்சலக தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் புதிதாக நடத்தப்பட உள்ள அஞ்சலக துறை சார்ந்த சில தேர்வுகளுக்கு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு மீறுவதாக இருக்கிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

“அஞ்சலக கணக்கர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட சதி?

இதுகுறித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “அஞ்சல் துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கர் பதவிகளுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வெளியிடும் வரை இந்தத் தேர்வை நடத்த கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசு கடந்த ஆண்டு அஞ்சல் துறையில் 'போஸ்ட்மேன்' பதவிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பிலும் இதுபோலவே ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு என அறிவித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி அந்த தேர்வு நடத்தப்பட்டது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.

அது தொடர்பாக மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சனை எழுப்பியதால் ‘2019 ஜூலை மாதம் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், மத்திய அரசு தமிழ் உட்பட எல்லா மொழிகளையும் மதிப்பதாகவும்’ சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். அதன் பின்னர் அந்தத் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்டது.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக இப்போது கணக்கர் தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. எப்படியாவது தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்து விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வை நடத்துவதற்கான புதிய அறிவிப்பை வெளியிடவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories