தமிழ்நாடு

நிலத்தை அபகரித்து, கொலைவெறித் தாக்குதல் : அ.தி.மு.க பிரமுகர் அராஜகம் - நடவடிக்கை எடுக்காத காவல்துறை!

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் காவல்துறை.

நிலத்தை அபகரித்து, கொலைவெறித் தாக்குதல் : அ.தி.மு.க பிரமுகர் அராஜகம் - நடவடிக்கை எடுக்காத காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை சேப்பாக்கம் அ.தி.மு.க பகுதி செயலாளர் சிவா, தங்களது நிலத்தை அபகரித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீசன். இவருக்கு சொந்தமாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் வணிகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் பகுதி அ.தி.மு.க செயலாளராக இருக்கும் எம்.கே.சிவா, பைனான்ஸ் கம்பெனி நடத்துவதற்காக ஜெகதீசனிடம் இருந்த கடையை ரூபாய் 8 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஆனால் பைனான்ஸ் கம்பெனி நடத்தாமல் அ.தி.மு.க அலுவலகமாக மாற்றிய நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வாடகை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இடத்தை காலி செய்யாமல் தொடர்ந்து எம்.கே.சிவா தனக்கு கொலை மிரட்டலும் விடுத்து வருவதாக ஜெகதீசன் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்றிரவு ஜெகதீசனின் மகன் சர்வேஸ்வரன் மீது எம்.கே.சிவாவின் ஆட்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் சர்வேஸ்வரனின் முகம் மற்றும் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகம் முதலமைச்சர் தனிப்பிரிவு ஆகியவற்றில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நேற்று இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஆளும்கட்சியை சேர்ந்தவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சேப்பாக்கம் காவல் ஆய்வாளர்.

தன் மகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்.கே.சிவா மற்றும் அவருடைய ஆட்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே திருவல்லிக்கேணி ஆய்வாளராக இருந்த மணிவண்ணன் என்பவர் எம்.கே.சிவா மீது நடவடிக்கை எடுத்ததால் அவரை உயரதிகாரிகள் துணைகொண்டு இடமாற்றம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories