தமிழ்நாடு

“ஓயாத சாதி ஆதிக்க கொடுமை: அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் துணை தலைவர்”- தலித் பஞ்சாயத்து தலைவி புகார்!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் பணி செய்யவிடாமல் தடுத்து தன்னை தரையில் அமர வைப்பதாக ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி புகார் அளித்துள்ளார்.

“ஓயாத சாதி ஆதிக்க கொடுமை: அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் துணை தலைவர்”- தலித் பஞ்சாயத்து தலைவி புகார்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தரையில் அமர வைப்பதாக விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி புகார் அளித்துள்ளார். இது முதல்முறையல்ல, தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இக்கொடுமையை அனுபவித்து வருவது கண்கூடு.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கல்வியறிவும், தொழில்நுட்பமும் அதிகரித்து வரும் சூழலிலும் அவற்றையெல்லாம் உட்கிரகித்துக்கொண்டு செழித்து வளர்கின்றன ஆதிக்க சாதியினரின் கொடுவாட்கள். இதற்கு நாள்தோறும் பொதுவெளிக்கு வரும் தாழ்த்தப்பட்ட மக்களின் புகார்களே சாட்சி.

வாழும் காலத்தில் மட்டுமல்லாது, சுடுகாட்டுக்குச் செல்லும் பொதுப்பாதையை மறித்து, தாழ்த்தப்பட்ட மக்களின் சடலத்தை இந்த வழியே எடுத்துச் செல்லக்கூடாது எனச் சொல்வது வரை தினந்தோறும் எங்கேனும் சாதி ஆதிக்கக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களை கண்ணியக் குறைவாக நடத்துவது, தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் குளங்கள் போன்ற நீர்நிலைகளைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது, கோவில்களில் நுழைவதைத் தடுப்பது, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அவமதித்து அரசியலமைப்புச் சட்டத்தையே நிர்மூலமாக்குவது, சாதிரீதியான பாலியல் தாக்குதல்கள் என சாதி ஆதிக்கத் திமிர் கொண்டவர்கள் புரியும் கொடுமைகள் சொல்லி மாளாது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்களின் வன்கொடுமைத் தாக்குதல் குறைந்தபாடில்லை. மிகக் கடுமையான இச்சட்டத்தால்கூட தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்விதான்.

தமிழகத்தில் நடக்கும் சாதிரீதியான வன்கொடுமைச் சம்பவங்களில் குறைந்த அளவிலேயே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றிலும் மிகமிகக் குறைந்த அளவே (5 சதவிகிதத்திற்கும் குறைவு) தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான படுகொலைகள், பாலியல் தாக்குதல்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான வன்கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக இந்தச் சாதிய சமூகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.

இட ஒதுக்கீட்டின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடம் உறுதி செய்யப்பட்டாலும், அப்பகுதிகளில் உள்ள ஆதிக்கசாதியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை செயல்பட விடாமல் செய்வது தொடர்பான புகார்கள் தமிழகத்தில் வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்தாண்டில் மட்டுமே ஏகப்பட்ட கொடுமைகள் அரங்கேறின. திருவள்ளூர் மாவட்டத்தில், சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட ஊராட்சி தலைவரை கொடியேற்ற அனுமதிக்காதது, கடலூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியது, கூட்டங்களில் தனிமைப்படுத்தியது என புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில்தான் இன்று, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து தரையில் அமர வைப்பதாக விருதுநகர் மாவட்டம் குருமூர்த்தி நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

“ஓயாத சாதி ஆதிக்க கொடுமை: அலுவலகத்திற்கு வரவிடாமல் தடுக்கும் துணை தலைவர்”- தலித் பஞ்சாயத்து தலைவி புகார்!

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் முத்துலட்சுமி கூறுகையில், “நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் என்னை பணி செய்யவிடாமல் ஊராட்சி துணை தலைவர் வரதராஜன் தடுக்கிறார்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உனக்கு இடம் இல்லை என்றும் தரையில்தான் அமர வேண்டும் என்றும் ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் வெளியில்தான் இருக்கவேண்டும் என்றும் கூறி மிகவும் இழிவுபடுத்துகிறார். இதுவரை ஊராட்சி அலுவலக நாற்காலியில் நான் அமர்ந்ததே இல்லை.

ஊராட்சியில் மேற்கொள்ளும் எந்தப் பணி குறித்தும் எனக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஊராட்சியில் உள்ள 6 வார்டு உறுப்பினர்களும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.

எனவே, ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் என்னை பணி செய்ய விடாமல் தடுக்கும் துணைத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சாதியக் கொடுமைகள் சமூகநீதி போற்றும் தமிழ் மண்ணுக்கு நேர்ந்திருக்கும் அவமானம். இந்தியாவின் மற்ற பல மாநிலங்களை விட சமூக நீதியையும், சமத்துவத்தையும் முன்னிறுத்தும் தமிழ்நாட்டில் இக்கொடுமைகள் ஒழிந்து என்று விடிவு ஏற்படுமோ என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

banner

Related Stories

Related Stories