தமிழ்நாடு

கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நங்கநல்லூரில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி!

சென்னை நங்கநல்லூரில் சாலையில் திடீரென பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நங்கநல்லூரில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நங்கநல்லூரிலிருந்து வாணுவம்பேட்டை செல்லும் பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சாலையில் திடீரென சுமார் 10 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், வாகன ஓட்டிகளும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க சாலையில் யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைத்தனர்.

இதனையடுத்து, ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் உத்தரவின்படி ஆலந்தூர் மெட்ரோ குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ராணி மற்றும் அதிகாரிகள் தி.மு.க வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பொது நல ஊழியர்கள் வந்து நங்கநல்லூரில் இருந்து வாணுவம்பேட்டை செல்லக்கூடிய சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர்.

கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நங்கநல்லூரில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி!

மடிப்பாக்கம், மேடவாக்கம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நங்கநல்லூருக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த சாலையைத்தான் பயன்படுத்துவார்கள். தற்பொழுது இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திடீரென எதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது சாலையின் நடுவே செல்லும் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் நங்கநல்லூரில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி!

பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டதால் நங்கநல்லூரில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு கழிவு நீர் செல்ல மாற்று ஏற்பாடுகளை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பார்க்க அருகில் வசிக்கும் ஏராளமானோர் வந்து குவிந்ததால் அங்கு ஒரு பரபரப்பு காணப்பட்டு வருகிறது. வாகனங்கள் அதிகளவில் செல்லக்கூடிய இந்தச் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories