தமிழ்நாடு

“உள்ளத்தில் நிறைந்திருக்கும் நம் ‘உவமைக் கவிஞர் சுரதா’வின் நூற்றாண்டுப் புகழ் பாடுவோம்”: மு.க.ஸ்டாலின்

உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் 100-ஆவது பிறந்தநாளில் அவரது தனிப்பெரும் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உள்ளத்தில் நிறைந்திருக்கும் நம் 
 ‘உவமைக் கவிஞர் சுரதா’வின் நூற்றாண்டுப் புகழ் பாடுவோம்”: மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“திராவிட இயக்கச் சிந்தனையுடன், தமிழ் இலக்கிய வானத்தில் சிறகடித்து மிக மிக உயரத்திலே பறந்து பாடிக் கொண்டிருந்த உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் புகழை, அவரது நூற்றாண்டில் ஏற்றிப் போற்றிடுவோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “திராவிட இயக்கத்தின் தனிப் பெரும் கவியாம் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் மாணவராக - அவரது கவிதா மண்டலத்தில் வாடாத வண்ண மலராக முகிழ்த்து வந்து வாழ்நாளெல்லாம் மணம் பரப்பிய உவமைக் கவிஞர் சுரதா - சுப்பு ரத்தின தாசன் - அவர்களின் 100-ஆவது பிறந்தநாளில் அவரது தனிப்பெரும் தமிழ் இலக்கியப் பங்களிப்புகளை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்!

கவிதைகளிலும், திரைப்படப் பாடல்களிலும், புத்தம் புதிய உவமைகளை மிகச் சிறப்பாகவும் செறிவாகவும் கையாண்டவர் கவிஞர் சுரதா. ‘விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம்’ என்ற பாடலில், ‘பத்துக்கு மேலாடை பதினொன்றே ஆகும்’ என்கிற அவரது உவமையும், அதற்கான கற்பனை நயமும், அவரின் தனிப்பெரும் ஆற்றலைக் காட்டும் ஒரு துளிப் பாட்டாகும்.

“உள்ளத்தில் நிறைந்திருக்கும் நம் 
 ‘உவமைக் கவிஞர் சுரதா’வின் நூற்றாண்டுப் புகழ் பாடுவோம்”: மு.க.ஸ்டாலின்

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் மீதும், தனிப்பட்ட முறையில் என் மீதும், மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர் உவமைக் கவிஞர் சுரதா. கலைஞரின் கவிதை மழை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, கவிதையின் சிறப்புகளை விளக்கி, நடப்பு அரசியல் சூழல்களை தனக்கேயுரிய முறையில் அவர் பேசியது, இன்னமும் எனது செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அவர் உடல் நலிவுற்றிருந்த நிலையில், அவரது தமிழ்த் தொண்டு தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன், சிகிச்சைச் செலவுகளை அரசு ஏற்கும் என அன்றைய முதலமைச்சரான தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்ததும் மறக்க முடியாத நிகழ்வு. உவமைக் கவிஞருக்குத் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் - அசோக் நகரில், சிலை திறந்து சிறப்பு சேர்த்தவர் கலைஞர்.

திராவிட இயக்கச் சிந்தனையுடன், தமிழ் இலக்கிய வானத்தில் சிறகடித்து மிக மிக உயரத்திலே பறந்து பாடிக் கொண்டிருந்த உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் புகழை, அவரது நூற்றாண்டில் ஏற்றிப் போற்றிடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories