தமிழ்நாடு

“அண்ணா பல்கலையை கபளீகரம் செய்ய முயன்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்க தலைவரின் உத்தரவை ஏற்று இளைஞரணி - மாணவரணி சார்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு நெருக்கடி தர தயங்கமாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அண்ணா பல்கலையை கபளீகரம் செய்ய முயன்றால் மாபெரும் போராட்டம் நடத்துவோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“5 ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்” என்று, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா? அல்லது அண்ணா பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் - ஆளுநர் - துணைவேந்தர் ரகசியக் கூட்டணியா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பல கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை தந்த அண்ணா பல்கலைக்கழக தமிழகத்தின் பெருமைகளுள் ஒன்று. 'நன்றாக இருக்கும் அதை இரண்டாக பிரிக்கிறேன்' என ஒன்றிய அரசு கூறுவதும், 'மாநில அரசின் உதவி வேண்டாம்-தனியாக ரூபாய் 1,500 கோடி திரட்ட முடியும்' எனும் சூரப்பா கடிதமும் பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்து சிதைக்கும் முயற்சியே.

மாநில உரிமைக்கு எதிராக நடக்கும் சூரப்பாவை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது? 69% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தாமல் உயர் சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாதென்று முதல்வர் ஏன் பிரதமருக்கு கடிதம் எழுதவில்லை? சூரப்பாவின் சூழ்ச்சியில் எடுபிடிகளுக்கும் பங்குண்டா? கவர்னரை சந்தித்ததுகூட இதற்காகத்தானோ?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இதுபோன்ற கேள்விக்கு என்ன பதில்? அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையைக் காக்க தலைவரின் உத்தரவை ஏற்று இளைஞரணி - மாணவரணி சார்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு நெருக்கடி தர தயங்கமாட்டோம் என இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories