தமிழ்நாடு

சொத்து தகராறில் அண்ணனே தம்பியைக் கொன்ற கொடூரம் - ஊரடங்கில் சொந்த ஊரில் நிகழ்ந்த விபரீதம்!

பேசித் தீர்க்க வேண்டிய ஒரு சாதாரண நிலப் பிரச்னை, இப்போது இரண்டு குடும்பங்ளுக்குமே சேதாரத்தையும் உண்டாக்கியதோடு, உயிர்பலியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சொத்து தகராறில் அண்ணனே தம்பியைக் கொன்ற கொடூரம் - ஊரடங்கில் சொந்த ஊரில் நிகழ்ந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சொத்து தகராறில் அண்ணனே தனது மகன்களுடன் சேர்ந்து தம்பியை ஈட்டியால் குத்திக் கொலை செய்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரச்னைக்குரிய நிலத்தில் தம்பி கழிப்பறை கட்டியதால் ஏற்பட்ட தகராறில் தனது மகன்களுடன் சேர்ந்து தம்பியை ஈட்டியால் குத்திக் கொலை செய்திருக்கிறார் அண்ணன்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அண்ணமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் ஏழுமலை. இவருக்கு சந்திரா, வாசுகி என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி சந்திராவுக்கு ராமதாஸ் என்கிற மகனும், இரண்டாவது மனைவி வாசுகிக்கு கலைச்செல்வன் என்ற மகனும் உள்ளார்.

தம்பி கலைச்செல்வன் சென்னை பெரம்பூர் மாநகர பேருந்து பணிமணையில் பணிபுரிந்து வருகிறார். அண்ணன் ராமதாஸ் ஆலந்தூர் மாநகர பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் வசித்து வந்த இவர்கள் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான செஞ்சியில் வசித்து வருகின்றனர்.

ராமதாஸ் மற்றும் கலைச்செல்வன் இருவரது வீடும் அருகருகே அமைந்துள்ளது. இருவரது வீடுகளுக்கும் இடையே இருக்கும் நிலம் யாருக்குச் சொந்தமென கடந்த பல வருடங்களாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த பத்துநாட்களுக்கு முன்பு அந்த காலி நிலத்தில் கலைச்செல்வன் கழிப்பறை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறார். இதனால் ராமதாஸ் குடும்பத்தினருக்கும், கலைச்செல்வன் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இந்த தகராறு கைகலப்பாகிப் போகவே, காவல்நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அதன்பிறகு பிரச்னையை நீதிமன்றத்துக்குப் சென்று பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டு காவல்நிலையத்தில் இருதரப்பினரும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ராமதாஸ் மற்றும் இரண்டு மகன்களும் சேர்ந்து கலைச்செல்வனை ஈட்டியால் நெற்றி, வயிற்றுப் பகுதிகளில் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வன் உயிரிழந்திருக்கிறார். மேலும் பலத்த காயமடைந்த கலைச்செல்வனின் மனைவி காயத்திரி, தாய் வாசுகி மற்றும் தாய்மாமன் ஆகியோர் பலத்த காயங்களுடன் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமதாஸ் மற்றும் அவரது மகன்கள் 2 பேரை வளத்தி போலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories