தமிழ்நாடு

“வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக” - தி.மு.க எம்.எல்.ஏ வேண்டுகோள்!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்கச் செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

“வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக” - தி.மு.க எம்.எல்.ஏ வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வெள்ளலூர் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பை கிடங்கு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.” என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கோவை மாநகராட்சி பகுதிகளில் நாளொன்றுக்கு சேகரமாகும் சுமார் 1,200 டன் அளவிலான குப்பைகள் வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 20 இலட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ள பழைய குப்பைகளை தரம் பிரித்து கழிவு மக்க செய்ய, கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60.11 கோடியில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்க செய்யும் திட்டத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

அமைச்சர் சார்பில் பூஜை போடப்பட்டு ரூ.60.11 கோடியில் நிதி ஒதுக்கியதோடு சரி. ஆனால் இன்று வரையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் மறு சுழற்சி செய்யும் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள சுமார் 20 இலட்சம் மெட்ரிக் டன் தரம் பிரிக்கப்படாத பழைய குப்பைகளால், வெள்ளலூர் சுற்றுவட்டார பகுதிகளில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு , நிலத்தடி நீர் மாசு, காற்று மாசு மற்றும் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு புகை மூட்டம் ஏற்படுவதால் பல்வேறு சுவாச கோளாறு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் குப்பை கிடங்கில் எந்த ஒரு மருந்தும் அடிக்கப் படுவதில்லை. இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வெள்ளலூர் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பை கிடங்கு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இங்குள்ள குப்பைகளை மேலாண்மை செய்ய, கோவை மாநகராட்சி நிர்வாகம் இனியும் தூங்கி வழியாமல் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வெள்ளலூர் பகுதியில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும், கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்க, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 69 இடங்களில் சிறு மறுசுழற்சி மையங்கள் ( மைக்ரோ கம்போஸ்டிங் செண்டர் ) தற்போது கட்டப்பட்டு வருவதாகவும், அதில் 12 மையங்கள் முழுமையாக கட்டப்பட்டுவிட்டன என்றும், இதனால் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் குப்பைகள் சேர்வது பெரும் அளவில் குறைக்கப்படும் என்றும், கோவை மாநகராட்சி சார்பில், கடந்த ஜூலை 8ம் தேதி கூறப்பட்டது.

“வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக” - தி.மு.க எம்.எல்.ஏ வேண்டுகோள்!

ஆனால் கோவை மாநகராட்சி அறிவித்தபடி இன்று வரையிலும், இன்னும் ஒரு மையத்தில் கூட, இந்த மறு சுழற்சி பணிகள் தொடங்கப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த மறு சுழற்சி மையங்கள் பயன்படுத்தப்படாமல் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

ஏற்கனவே கோவை மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களுக்கு, குடிநீர், சுகாதாரம், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராமல் வஞ்சித்து வருகிறது. சுகாதார சீர்கேட்டின் இருப்பிடமாக கோவை மாநகரம் திகழ்கிறது. தமிழக உள்ளாட்சித்துறை முற்றிலும் செயலிழந்து, ஒட்டு மொத்தமாக கோவை மாநகராட்சி நிர்வாகமே முடங்கிக் கிடக்கிறது.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில், கடந்த பத்தாண்டுகளாக, சிறு மலைகளாக குவிக்கப்பட்டுள்ள குப்பைகளால், குடியிருப்புவாசிகள் நிம்மதி இழந்துள்ளனர். சுற்றுச்சூழலுக்கும், மக்களின் சுகாதாரத்துக்கும், பெரும் அச்சுறுத்தல் ஆக மாறி வருகிறது.

ஆகவே, கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் கழிவு மக்கச் செய்யும் பணிகளை காலந்தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், இல்லாவிடில் பொதுமக்களை திரட்டி தி.மு.க சார்பில் அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories