தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்றிரவு களிமண்ணில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலையின் படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதைத்தொடர்ந்து, அந்தப் பதிவை திசைதிருப்பி, மக்கள் மத்தியில் உள்நோக்கம் கொண்ட கருத்தைப் பரப்ப பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான யூகங்களைப் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், தான் பிள்ளையார் படத்தை பதிவிட்டதற்கான காரணம் குறித்து வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாசிச பா.ஜ.க மற்றும் மாநில எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இதைப் பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இன்று எது நடந்தாலும் அதைக் கழகத்திற்கு எதிரானதாகத் திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பிள்ளையார் சதுர்த்திக்காக என் அம்மா வாங்கியிருந்த பிள்ளையார் சிலையைப் பார்த்த என் மகள், அந்த சிலையை எப்படிச் செய்வார்கள் எனக் கேட்டு, அதுகுறித்து அறிந்துகொண்டார்.
சிலையைக் கரைப்பதற்கு முன் இந்தச் சிலையுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுங்கள் எனக் கேட்ட அவரது விருப்பத்தின் பேரில் புகைப்படம் எடுத்து, அவரது விருப்பத்ற்காகவே என் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவே” எனக் குறிப்பிட்டுள்ளார்.