தமிழ்நாடு

காமராசர் பல்கலைக்கழகத்தில் திடீரென முளைத்த விநாயகர் சிலை; கொந்தளித்த மாணவர்கள்: சிலையை அகற்றிய நிர்வாகம்!

காமராசர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டு அந்த இடத்தில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

காமராசர் பல்கலைக்கழகத்தில் திடீரென முளைத்த விநாயகர் சிலை; கொந்தளித்த மாணவர்கள்: சிலையை அகற்றிய நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும்,  ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் விநாயகர் சிலை ஒன்றை நிறுவியுள்ளது.

ஒருகுறிப்பிட்ட மத வழிப்பாட்டை முன்னிறுத்துவது மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் எனக் கூறி தமிழக அரசு உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் திடீரென முளைத்த விநாயகர் சிலை; கொந்தளித்த மாணவர்கள்: சிலையை அகற்றிய நிர்வாகம்!

இதுதொடர்பாக அவ்வமைப்புகளின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நேற்று இரவோடு இரவாக உருவாக்கப்பட்டுள்ள பிள்ளையார் கோவில் அங்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஏற்பாடுகளும் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் பதற்றத்தினை உருவாக்கி உள்ளது .

அரசு சார்ந்த எந்த நிறுவனத்திலும் மத, சாதிய அல்லது மக்களிடையே பிரிவினை உருவாக்கும் எந்த ஒரு அடையாளமும் இருக்கக்கூடாது என்பதே விதி . அதனையே நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 15 வது பிரிவு குறிப்பிடுகிறது. இதனை மீறி அரசியல் சட்ட மாண்புகளையும் , பல்கலைக்கழக விதிகளையும் மீறி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரவோடு இரவாக ஒரு மதத்தின் சார்பான பிள்ளையார் சிலை வைத்து கோவில் கட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது நிர்வாகம்.

இந்த கோவில் கட்டுவதற்கான ஒப்புதலும் அதற்கான ஏற்பாடுகளோ பல்கலைக்கழகத்தின் எந்த மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டன என்பதை நிர்வாகம் வெளியிட வேண்டும். கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் இதற்கு முன்பு எப்போதும் பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் கொண்டாடப்படாத விநாயகர் சதுர்த்தி நிகழ்வினை நடத்திட நிர்வாகம் தயாராகி வருவது மக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் செயலாகும்.

காமராசர் பல்கலைக்கழகத்தில் திடீரென முளைத்த விநாயகர் சிலை; கொந்தளித்த மாணவர்கள்: சிலையை அகற்றிய நிர்வாகம்!

உயர்நீதிமன்றமும் , தமிழக அரசும் பொது வெளியில் விழா கொண்டாடக்கூடாது என்கிற உத்தரவினை வெளியிட்டும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி வெளிப்படையாக அரசின் அறிவுறுத்தலையும் மீறி இப்படி செய்வது உயர்கல்வி மையத்திற்கான பண்பல்ல என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே மாவட்ட நிர்வாகமும் , தமிழக அரசாங்கமும் திடீரென நிறுவப்பட்டுள்ள பிள்ளையார் சிலையை அனைத்து தரப்பு மாணவர்களும் பயிலக்கூடிய கல்விநிலைய வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து பலரும் கண்டனம் தெரிவிக்க அடுத்த ஒருமணிநேரத்திலேயே காமராசர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்படிருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டு அந்த இடத்தில் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவ்வமைப்பினர் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் இதற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories