தமிழ்நாடு

“பெண்களுக்கு சொத்தில் சமபங்கு : திராவிட இயக்கத்தின் லட்சிய வெற்றி; பெரியார் என்றும் வெல்வார்” - கி.வீரமணி

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு திராவிட இயக்கத்தின் லட்சிய வெற்றியாகும்.

“பெண்களுக்கு சொத்தில் சமபங்கு : திராவிட இயக்கத்தின் லட்சிய வெற்றி; பெரியார் என்றும் வெல்வார்” - கி.வீரமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்களுக்குச் சொத்துரிமை குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு தந்தை பெரியாரின் - சமூகநீதியின் - திராவிட இயக்கத்தின் லட்சிய வெற்றியாகும்; என்றும் பெரியார் வெல்வார் என்பது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையின் விவரம் வருமாறு:

வரவேற்கத்தக்க ஒன்று!

ஆண் பிள்ளைகளுக்குரியது போன்றே, பெண் மகவுகளுக்கும் பெற்றோர் சொத்தில் சம உரிமை, சம பங்கு உண்டு என்பதை உச்சநீதிமன்றம் ஒரு வழக்கின்மூலம் உறுதி செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டுத் தீர்மானங்கள்!

இந்து வாரிசுரிமை, சொத்துரிமை பற்றி தந்தை பெரியார் அவர்கள், தாம் 1925 இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு, 1929 - செங்கல்பட்டில் நடந்ததில் ‘பெண்களுக்குச் சமத்துவம்‘ என்ற தலைப்பில் நிறைவேற்றிய தீர்மானங்களில்,

24 ஆவது தீர்மானத்தில் ‘‘பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமான சொத்துரிமைகளும், வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்படவேண்டுமென்றும், பெண்களும், ஆண்களைப் போலவே, எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்தி வருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும், அவகாசமும் கொடுக்கப்பட வேண்டுமென்றும்,’’

“பெண்களுக்கு சொத்தில் சமபங்கு : திராவிட இயக்கத்தின் லட்சிய வெற்றி; பெரியார் என்றும் வெல்வார்” - கி.வீரமணி

25 ஆவது தீர்மானத்தில், ‘‘பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் வேலையில் பெண்களே அதிகமாக நியமிக்கப்படுவதற்குத் தக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்றும், ஆரம்பக் கல்வி கற்றுக் கொடுக்கும் உபாத்தியாயர் வேலைக்குப் பெண்களையே நியமிக்கவேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது!’’

மேற்கண்டவையே இன்று அரசின் சட்ட திட்டங்களாக, நடைமுறைகளாக செயல்வடிவம் எடுத்துள்ளன என்பதற்குத் தந்தை பெரியாரும், அதனை ஆட்சியில் இருந்தபோது செயல்படுத்த தி.மு.க. தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் எடுத்த முன்னோடி முயற்சிகளையும், இந்தியப் பெண்ணுலகம் மறக்காமல் நன்றி செலுத்தவேண்டும்.

பார்ப்பன சனாதன மதவெறியர்கள் கடும் எதிர்ப்பால் - அம்பேத்கரின் சட்டம் நிறைவேறவில்லை!

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது, அவர் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சித்த இந்து சட்டத் திருத்த மசோதாவில் (Hindu Code Bill) இதனை நிறைவேற்றவிடாமல் தடுத்தது காங்கிரஸ் மற்றும் பார்ப்பன சமுதாய இந்து சனாதனிகள் ஆவார்கள்.

(காஞ்சி மகாபெரியவா என்று இன்றும் புகழப்படும் சங்கராச்சாரியாரான சந்திரசேகரேந்திர சரசுவதி, மிகுந்த எதிர்ப்பு, முட்டுக்கட்டையெல்லாம் எப்படி போட்டார் என்பதை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்).

இதனை அந்நாளைய குடியரசுத் தலைவரும், காசியில் பார்ப்பனர்களின் காலைக் கழுவியவருமான இராஜேந்திர பிரசாத் கடுமையாக எதிர்த்ததின்மூலமும், பார்ப்பன சனாதன மதவெறியர்கள் கடும் எதிர்ப்புக் காட்டியதாலும், அம்பேத்கரின் சட்டம் நிறைவேறாமல் கைவிடப்பட்டது.

இதனை எதிர்த்தே டாக்டர் அம்பேத்கர் தனது மத்திய சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

திராவிடர் இயக்கத்தின் லட்சிய வெற்றி!

பிறகு, 2005 இல் தி.மு.க பங்கேற்ற யு.பி.ஏ அரசில் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் நிறைவேறியது. அதன்மீதுதான் உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு விளக்கம் அளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது.

எனவே, இந்தத் தீர்ப்பு, தந்தை பெரியாரின் - சமூகநீதியின் - திராவிடர் இயக்கத்தின் லட்சிய வெற்றியாகும். என்றும் பெரியார் வெல்வார் என்பது உறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories