தமிழ்நாடு

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

“மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் ‘தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!’ என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

29.07.2020 புதன்கிழமை மாலை 3 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்ற ”மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் தி.மு.க மாநில மாணவர் அணி செயலாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் குணசேகரன், மாநிலச் செயலாலர் சீ.தினேஷ், இந்திய மாணவர் சங்க மாநிலப் பொறுப்பாளர் நிரூபன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் பால சசிக்குமார், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் குர்ஷித், இர்ஷத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கஸாலி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கச் செயலாலர் கா.அமுதரசன், ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் முகமது ரியாஸ், தி.மு.க. மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் பூவை.ஜெரால்டு, மன்னை த.சோழராஜன், வீ.கவி கணேசன், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

தீர்மானம்-1 :

தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!

2016-ஆம் ஆண்டும், அதற்குப் பிறகு 2019-லும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர், ஆசிரியர், பெற்றோர் அனைவருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், கல்வி உரிமையையும், கல்வி துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், குலக் கல்வி முறையைக் கொண்டு வந்து, பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து, கல்வி உதவித் தொகை, இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதி வாய்ப்புகளை ஒழித்து கல்வியை முழுக்கவும் வணிகப் பொருளாக மாற்றவும், உயர்கல்விக் கட்டமைப்பை ஒழித்து வணிகக் கொள்ளைக்கு வழிவகுக்கவும், காவி+கார்ப்பரேட் கூட்டணிக்குள் மாணவர்களைச் சிக்க வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளதை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி, காரண காரிய விளக்கங்களோடு, கடும் எதிர்ப்பலையைப் பதிவு செய்துள்ளோம். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும், இந்தக் கொரோனா பெருந் தொற்றுக்காலத்தைப் பயன்படுத்தி, தேசியக் கல்விக் கொள்கை வரைவை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதை ஒழித்துக் கட்டும் வரை தொடர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஒருபோதும் காவிகளின் கனவு நிறைவேற மாணவர் சமூதாயம் அனுமதிக்காது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

தீர்மானம் - 2 :

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக அமல்படுத்துக !

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்கிறோம். சமூகநீதியை நிலைநாட்ட ஒரே குரலில் ஒலித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், தமிழ்நாடு என்றென்றும் சமூகநீதி மண், தந்தை பெரியார் மண், இந்தியாவிற்கு வழிகாட்டும் முன்னோடி மாநிலம் என்ற சிறப்பை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கும், வாதாடிய வழக்குரைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வளவு கடுமையான சட்டப் போராட்டத்திற்குப் பிறகும், மருத்துவ மேல்பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு, இந்த தீர்ப்பு இவ்வாண்டுக்குப் பொருந்தாது என்பது ஏமாற்றமே! எனினும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இவ்வாண்டே இத்தீர்ப்பை அமல் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தீர்ப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதோடு, மத்திய அரசிடம் விழிப்பாக இருந்து போராட வேண்டும் என்று ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு’ வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளதால் பிற்படுத்தப்பட்டோருக்கான (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து) 50% இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்பது தெளிவாகி உள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து, இதில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் துரோகம் இழைக்க மத்திய அரசு முயலக் கூடாது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட வேண்டிய கமிட்டியை அமைப்பtஹை தாமதப்படுத்தியோ, அல்லது அந்தக் குழுவின் பரிந்துரைகளிலோ இத் தீர்ப்பின் சாரத்தை நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்காமல், உடனடியாக கமிட்டி அமைத்து சமூகநீதியைக் காக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

தீர்மானம் 3 :

நீட் தேர்வை ரத்து செய்க !

கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது எல்லா தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், தொடர்ந்து நிலவி வரும் அசாதாரணமான சூழலையும் , மாணவர்களின் மனநிலையையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நேரடியாகப் பங்கேற்ற கடந்த ஆண்டுத் தேர்வுகளிலேயே, கடும் சோதனைகளையெல்லாம் மேற்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களின் மனநிலையைக் குலைத்துச் சதி செய்த அதே வேளையில், பணக்கார, பிற மாநில ஆதிக்க சக்திகள் எண்ணற்ற ஆள்மாறாட்டங்கள், தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதும், அவை வெளிச்சதுக்கு வந்ததும் நீட் தேர்வின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஆன்லைன் தேர்வு என்பது மோசடிகளின் மொத்தக் கூடாரமாகவே அமையும் என்பதால், நீட் ஆன்லைன் தேர்வு என்ற சிந்தனையை அடியோடு விட்டுவிட்டு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும்.

நீட் தேர்வு என்பது நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுக்கும், வசதிவாய்ப்புள்ளவர்களுக்குமான தேர்வாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் உள்ள காலத்தில் நீட் தேர்வை நடத்தினால் அது ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆகவே இந்த ஆண்டு மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, பன்னிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும், இனி வரும் ஆண்டுகளிலும் இதே முறையை நடத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4 :

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் பருவத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

கொரோனா பெருந் தொற்றால் கல்லூரிகள் இயங்க முடியாத சூழலும், தேர்வுகள் நடத்த முடியாமலும் உள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களின் செமஸ்டர் எனும் பருவத் தேர்வை UGC ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் பருவத் தேர்வை ரத்து செய்து, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 :

CAA போராட்டத்தில் கைதான மாணவர்களை விடுதலை செய்க - பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடுக !

கொரோனா தொற்றுக்கு முன்பாக நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்று வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்யத் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் போராடிய மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்து வருகிறது.குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதை மிக வன்மையாக கண்டிக்கிறோம். போராடுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை! ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

காஷ்மீர், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த காரணத்துக்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கருத்துரிமையை நசுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

File image
File image

தீர்மானம் - 6:

ஆன்லைன் கல்விக் குளறுபடிகள்

ஆன் லைன் வகுப்புகளால், பள்ளி, கல்லூரி வகுப்பறைகளை ஈடு செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்தியா போன்ற வளரும் நாட்டில், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம், இணைய இணைப்பு, கருவிகள் போன்றவை கிடைக்காத நாட்டில், ஆன்லைன் கல்வி என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரால் மாணவ்வர்கள் மீது நிகழ்த்தும் அராஜகம் ஏற்கக்கூடியதல்ல. கணினியின் முன்னால், திறன்பேசிக் கருவிகளின் முன்னால் நாள்தோறும் மாணவர்களை அமர்த்துவதன் மூலம் உடல், மனநில்லையில் சிக்கல் எழும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேவையான கருவிகளையும், தடையில்லா இணைய இணைப்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அத்தனை பேரும் படிக்க அத்தனை கணினிகள்/ கருவிகளையும் வாங்க வழியில்லாமல் மன உளைச்சலுக்கு பெற்றோரை உள்ளாக்குவதும் குரூரமானது. எனவே, இத்தகைய போக்குகளை இளம் பிஞ்சுகள் மீது திணிப்பதைப் பிற மாநிலங்கள் தடுத்திருப்பதைப் பார்த்தாவது, தமிழக அரசு அது குறித்துச் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்லைன் கல்வி என்னும் போக்கால் சந்திக்கும் பிரச்சினைகளையும், கட்டணக் கொள்ளை குறித்தும் விவரம் திரட்டி, நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைத்து செயல்படுவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 7:

வெளிநாட்டில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பும், திரும்புவதற்கான ஏற்பாடுகளும் தேவை

வெளிநாட்டில் பயின்று வரும் தமிழக மாணவர்களில் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளமையால், அத்தகைய மாணவர்கள் குறித்து விவரங்களைத் திரட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படுகிறது. அம் மாணவர்கள் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசும், இந்திய அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அந்தந்த நாடுகளிலேயே இருக்க வேண்டிய அவசியமுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசுகள் கவனமெடுக்க வேண்டுமென்பதையும் இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறாக தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

banner

Related Stories

Related Stories